வானளாவிய கட்டடங்கள் தினம்

வழக்கமாக, 152 மீட்டர்களுக்கும் அதிகமான உயரம் உள்ள மனிதர்கள் வாழும் கட்டடங்கள், வானளாவிகள் அல்லது வானளாவிய கட்டடங்கள் (ஸ்கை ஸ்கிராப்பர்ஸ்) எனப்படுகின்றன. 19ம் நூற்றாண்டுவரை ஆறு மாடிகளுக்கு மேல் உயரம் கொண்ட கட்டிடங்களைக் காண்பது அரிது. எஃகு கட்டமைப்பைக் கொண்ட முதல் வானளாவிய வணிகக் கட்டிடங்கள் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக ஆரம்பித்தன. முதல் வானளாவிய கட்டடமாக சிகாகோவில் உள்ள வீட்டுக் காப்பீட்டுக் கட்டடமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இது 10 தளங்களையேக் கொண்டிருந்தது.

அக்காலத்தில் எல்.ஐ.சி கட்டடத்தையே ஆச்சரியமாக பார்த்தவர்கள் நாம். அன்றைய திரைப்படங்களில் எல்.ஐ.சி கட்டடமும் சென்ட்ரல் ரயில் நிலையமும்தான் சென்னையின் அடையாளம். லிப்ட் வசதிகள் இல்லாத அக்காலத்தில் மனிதர்கள் தினமும் ஆறு மாடிகளுக்கு மேல் ஏறி இறங்குவது சாத்தியமில்லை, 15 மீட்டர்களுக்கு மேல் நீர் வழங்குவதும் இயலாது என்பதால் அதற்குமேல் கட்டடங்களை காண முடியாது. நமது வானளாவிய கோயில் கோபுரங்களை இதில் கணக்கு சேர்க்காதீர்கள்.

உருக்கு இரும்பு, வலுவூட்டிய காங்கிரீட், நீரேற்றிகள், லிப்ட் போன்ற தொழில்நுட்பங்கள், பொறியியல், கட்டடக்கலை வளர்ச்சி போன்றவற்றால் இன்று மிகவும் உயரமான கட்டடங்களை அனாயாசமாகக் கட்ட முடிகிறது.

வானளாவிய கட்ட்டங்களின் பாரம் தாங்கும் கூறுகள் ஏனைய கட்டிடங்களில் இருந்து வேறுபடுகின்றன. 4 மாடிகள் வரையிலான கட்டடங்களின் அவற்றின் சுவர்களே பாரத்தைத் தாங்கிக்கொள்ளும். ஸ்கை ஸிக்ராப்பர்ஸ் மிக உயரமானவை என்பதால் இவற்றின் பாரம், எலும்புக்கூடுகள் போன்ற உறுதியான சட்டக அமைப்புக்களால் தாங்கப்படுகின்றன. அதிகமான காற்று விசையைத் தாங்குவதற்காக, 40 மாடிகளுக்கும் அதிகமான உயரம் கொண்ட கட்டடங்கள் சிறப்புக் கவனத்துடன் வடிவமைக்கப்படுகின்றன.

உலகில் முதல் பத்து வானளாவிய கட்டடங்களில் முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகரத்தில் உள்ள புர்ஜ் கலிபா (828 மீ) உள்ளது. அடுத்ததாக, ஷாங்காய் கோபுரம் (632 மீ), அப்ரஜ் அல் பைட் கடிகார கோபுரம் (601 மீ), பிங்க் நிதி மையம் (599 மீ), லோட்டே உலக கோபுரம் (554.5 மீ), உலக வர்த்தக மையம் (541.3), குவாங்சோ சி.டி.எப் நிதி மையம் (530 மீ), தியாஞ்சின் சி.டி.எப் நிதி மையம் (530 மீ), சீனாசூன் (528 மீ) , தைபே (508 மீ).