வாட்ஸ் அப்பிற்கு நோட்டீஸ்

சர்வதேச ஸ்பேம் (தேவையற்ற அல்லது ஊடுருவும்) அழைப்புகளின் அதிகரித்து வரும் சிக்கல் குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பயனர் தனியுரிமை மீறல், செய்தி மற்றும் அழைப்பு சேவையை தவறாகப் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது. சர்வதேச ஸ்பேம் அழைப்பு புகார்கள் அதிகரித்து வருவதால், பயனர்கள் டுவிட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில் பல்வேறு நாட்டுக் குறியீடுகளிலிருந்து தெரியாத எண்களின் பட்டியலைப் பகிர்ந்து கொள்கின்றனர். இப்பிரச்னையை சமாளிக்க ஒரு தலையீடு தேவை என முன்மொழியப்பட்டுள்ளது. இந்த சூழலில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், டிஜிட்டல் தளங்கள் தங்கள் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது. ஸ்பேம் பிரச்சனைகள் இருந்தால், அது நிச்சயமாக வாட்ஸ்அப் உள்ளிட்ட எந்தவொரு மெசஞ்சர் தளமும் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியப் பிரச்சனை. துஷ்பிரயோகம் அல்லது தனியுரிமை மீறல் என்று கூறப்படும் ஒவ்வொரு வழக்கையும் அரசு கையாளும். பயனர்களின் தனியுரிமைக் கவலைகள் தொடர்பாக மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் என்று குறிப்பிட்டார்.

ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாரதமும் ஒன்று.  ஆய்வு செய்யப்பட்ட 20 நாடுகளில் ஒன்பதாவது இடத்தில் பாரதம் உள்ளது. பாரத மக்கள், இந்த எரிச்சலூட்டும் மற்றும் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகளால் அதிகபட்ச எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர் என்று ட்ரு காலர் நிறுவனத்தின் 2021 தரவு வெளிப்படுத்தியுள்ளது. பாரதத்தில் போலி செய்தி பகிர்வு மற்றும் தவறான தகவல்களை குறைக்க வாட்ஸ் அப் நிறுவனம் அதன் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் முறையை மேம்படுத்தியுள்ளது. இதனால், தற்போதைய அழைப்பு விகிதம் பாதியாகக் குறைந்துள்ளது. தவறான தகவல்களின் தற்போதைய நிகழ்வுகள் திறம்படக் கட்டுப்படுத்தப்படுகிறது. வாட்ஸ் அப் பாரதத்தில் சுமார் 500 மில்லியன் பயனர்களுக்கு பாதுகாப்பான பயனர் அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்க அயராது உழைத்து வருகிறது என அந்நிறுவனம் கூறியுள்ளது.