வங்க துறவி பிரணவானந்தர்

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஆர்.எஸ்.எஸ் கிளைகளில் நாள்தோறும் ஸ்வயம்சேவகர்கள் ‘ ஏகாத்மதா ஸ்தோத்திரம்’ (ஒருமைப்பாட்டு துதி) சொல்கிறார்கள்.
33 சுலோகங்களைக் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தில்
‘‘சுபாஷப் ப்ரணவானந்த:
க்ராத்தி வீரோ விநாயக:”
என்ற வரி வருகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுவாமி பிரணவானந்தர், புரட்சி வீரர் விநாயக தாமோதர சாவர்க்கர் என்ற பெயர்கள் இவ்வரியில் உள்ளன. இது போன்ற பெரியோர் பெயர்களின் தொகுப்பாக இந்த ஸ்தோத்திரம் அமைந்துள்ளது. பல துறைகளிலும், நாட்டின் பல பகுதிகளிலும் போற்றப்படும் பெரியோர்களை ஸ்வயம்சேவகர்கள் இதன் மூலம் நினைவு கூர்கின்றனர். இந்த வரியில் வரும் ஸ்வாமி பிரணவானந்தர் பிறந்த நாள் சித்திரா பௌர்ணமியன்று கொண்டாடப்படுகிறது.
ஸ்வாமி பிரணவானந்தர் சிறுவயதில் வினோத் என்று அழைக்கப்பட்டார். 1896ல் கிழக்கு வங்காளத்தில் (இன்று பங்களா தேஷ்) ஃபரீத்பூர் மாவட்டம் பாஜித்பூர் கிராமத்தில் விஷ்னுசரண் தாஸ் என்பவரின் மகனாகப் பிறந்தார். வலிமையான உடல் அமைப்புக் கொண்ட வினோத், பள்ளிப் படிப்பு முடிப்பதற்குள்ளேயே யோகி பாபா கம்பீர் நாத் என்ற துறவியிடம் தீட்சை பெற்று தவத்தில் மூழ்கினார்.
1914-ல் உலகப் பெரும் போர் துவங்கியது. பிரம்மச்சாரி வினோதின் ஆஸ்ரமம் புரட்சி விடுதலை வீரர்களின் பாசறை ஆயிற்று. போரின் போதே நாட்டை விடுவித்துவிட வேண்டும் என்ற தீவிர திட்டம் வகுத்து புரட்சியாளர்கள் செயல்பட்டனர். பிரிட்டிஷ் போலீஸ் வேட்டை துவங்கியது. ஆசிரமமும் அதற்கு இலக்காயிற்று. வினோத் நான்கு மாதம் சிறையிடப்பட்டார். ஆனால் அவர் மீது குற்றம் எதுவும் நிரூபணம் ஆகாததால் விடுதலை செய்யப்பட்டார். அவர் துறவு பூண்டு ஸ்வாமி பிரணவானந்தரானார். –
இருபதாவது வயதிலேயே ‘ஹிந்து மிலன் மத்திர்’ என்ற அமைப்பை ஊர் தோறும் துவக்கி ஹிந்துக்கள், ஜாதி முதலிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடப் பயிற்சி அளித்து வந்தார்.
– ‘‘ஹிந்துக்களின் நலனே இந்தியாவின் நலன், ருத்திராட்சம் உருட்டி ஜபம் செய்பவர்கள் உண்டு. ஆனால் எனது ஜபம் ‘நான் ஒரு ஹிந்து’ ‘நான் ஒரு ஹிந்து’ என்பதுதான். எனது ஜபமாலையின் மணிகளோ நாடு முழுவதிலும் உள்ள ஹிந்துக்கள் தான். இந்தியாவின் நலனுக்கான இயக்கங்கள் அனைத்திற்கும் நான் செய்யும் பணி அஸ்தி வாரமாக அமையும்” என்று ஸ்வாமி பிரண வானந்தர் கூறினார்.
அவர் வாழ்ந்த கிழக்கு வங்கப் பகுதியில் ஹிந்துக்கள் முஸ்லீம் வகுப்புவாத வெறியர்களால் கொடுமைப் படுத்தப்பட்ட போது, டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி என்ற மாபெரும் ஹிந்து அரசியல் தலைவரின் தலைமையில் ஸ்வாமி பிரணவானந்தர் ஹிந்து மாநாடு நடத்தி ஹிந்துக்களின் மனோபலத்தைப் பன்மடங்காக்கினார். அதற்கு முன், கல்கத்தா
சிரத்தானந்தர் பூங்காவில் நடைபெற்ற ஹிந்து மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதில் – ஸ்வாமி பிரணவானந்தரின் சீடர்களான தொண்டர்கள் பெரும்பங்கு வகித்தனர். அந்த மாநாட்டில் வீர சாவர்க்கர் கலந்து கொண்டார்.
‘ஹிந்துக்களுக்கு எல்லா சக்திகளும் உண்டு. ஆனால் ஒற்றுமையின் அவசியம் புரியவில்லை, ஹிந்து ஒற்றுமைதான் அடிப்படையான தேசியப் பணி’ என்ற கொள்கையுடன் பணிபுரிந்த ஸ்வாமி பிரணவானந்தர் 1941 ஜனவரியில் 45 வது வயதில் அமரரானார். அவர் நிறுவிய ‘பாரத் சேவாஸ்ரம் சங்கம்’ நாட்டின் பல பகுதிகளிலும் சேவை புரிந்தது.