வழிப்போக்கன்

இல்லறவாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார். அவரால் மறுநாள்தான் திரும்பி வரமுடியும். எனவே,  அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு உணவுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கொடுத்தாள். காட்டு வழியே அவரது பயணம் அமைந்தது.

நடுக்காட்டில் ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை உண்டார். பின்னர் பையை எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார். நினைத்ததைவிட விரைவில் தனது வேலைகளை முடித்துக் கொண்டார், ஊரை நோக்கிப் புறப்பட்டார். விரைவிலேயே புறப்பட்டதால், வீட்டிற்குச் சென்ற பின் இரவு உணவைச் சாப்பிடலாம் எனத் தீர்மானித்தார்.

திரும்பும் வழியில் ஒரு துறவி அமர்ந்திருப்பதை கண்டார். அந்த துறவி இவரிடம், ”இன்று நீ உன் வீடு திரும்பினால் உன் மனைவி இறந்து விடுவாள், திரும்பாவிட்டால் நீ இறந்து விடுவாய்” என்று கூறி தியானத்தில் ஆழ்ந்தார்.

இதைக்கோட்ட இல்லறவாசி திடுக்கிட்டார். துறவிகளின் வார்த்தைகள் பொய்க்காது என்பதை அறிந்த அவர், தம் மனைவியின் உயிரைக் காப்பதற்காக அன்று வீடு திரும்புவதில்லை என்று முடிவு செய்தார். காட்டில் விலங்குகள் எந்த நிமிடமும் தன் மீது பாய்ந்து கொல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் மெதுவாக, கவனமாக நடந்தார்.

சிறிது தூரம் நடந்தபிறகு, ஒரு மரத்தடியில் சில துறவிகள் அமர்ந்திருக்க தலைமைத் துறவி அருளுரை நிகழ்த்துவதைக் கண்டனர். அந்தத் தலைமைத் துறவி புத்தர் என அறிந்துகொண்டார். ஆர்வத்துடன் அவரது அருளுரையைக் கேட்டார். உரை நிறைவுற்ற பின்னர் புத்தரை வணங்கினார். வழியில் நிகழ்ந்ததை விளக்கமாக கூறி, தன்னைக் காக்குமாறு வேண்டினார்.

புன்னகை புரிந்த புத்தர். “எனக்குப் பசியாக இருக்கிறது. ஏதாவது சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்.

இல்லறவாசி அளவற்ற மகிழ்ச்சியுடன் பையைத் திறக்க முற்பட்டார். ஆனால் புத்தர், அந்தப் பையை அப்படியே தன்னிடம் தருமாறு கேட்டார். இல்லறவாசியும் பையை கொடுத்தார். புத்தர் மெதுவாக பையைத் திறந்து, அதன் உள்ளே இருந்த சிறிய விஷப்பாம்பை வெளியில் எடுத்தார்.

அதைக்கண்ட இல்லறவாசி திடுக்கிட்டார். மதியம் உணவருந்தப் பையைத் திறந்து மரத்தடியில் வைத்திருந்தபோது விஷப்பாம்பு பைக்குள் சென்றிருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டார். துறவி சொன்னதன் பொருள் அவனுக்குப் புரிந்தது.

மரணத்தை வென்றவர் என்று இதுவரையில் யாரும் இல்லை நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம். மனித நாகரீகத்தோடு செயல்படுவோம்.

(சமூக ஊடகத்தில் இருந்து)