வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

வழிபாட்டு தலங்கள் தொடர்பான சர்ச்சை பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. பாரதம் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரமடைந்தது. இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பாளர்கள் ஹிந்து ஆலயங்களை நாசமாக்கியுள்ளனர். ஹிந்து கோயில்களின் மீது அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள் இஸ்லாமிய மசூதிகளையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் எழுப்பியுள்ளனர். 1947ம் ஆகஸ்ட் 15ம் தேதி எத்தகைய நிலையில் வழிபாட்டு தலங்கள் இருந்தனவோ அதே நிலைதான் தொடர வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்தின் சாராம்சம்.

இது அடிப்படை உரிமையை மீறுகிறது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை இந்த சட்டம் துச்சமாக கருதுகிறது என்ற விமர்சனம் பரவலாக மேலோங்கியது. இப்பின்னணியில் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி 18 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.

மனுதாரர்களில் காசி ராஜ வம்சத்தைச் சேர்ந்த ராஜகுமாரி கிருஷ்ண பிரியா, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் எம்.பி. சிந்தாமணி மாளவியா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அனில் கபோத்ரா, சுவாமிகள் ஜிதேந்திரானந்த் சரஸ்வதி, தேவகி நந்தன் தாக்கூர் ஜி, வழக்கறிஞர்கள் சந்திரசேகர், ருத்ரா விக்ரம் சிங், அஸ்வினி உபாத்யாயா ஆகியோரும் அடங்குவர்.

அயோத்தியில் விண்ணளாவ ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ராம ஜன்ம பூமியான அயோத்திக்குப் பொருந்தக்கூடியது கிருஷ்ண ஜன்ம பூமியான மதுராவுக்கு பொருந்தாதா? என்ற கேள்வி நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

ஹிந்துக்களின் ஆலயங்கள் மட்டுமே தரைமட்டமாக்கப்பட்டன என்று கருதி விடக்கூடாது. சீக்கியர்களின் வழிபாட்டு தலங்கள், சமணர்களின் வழிபாட்டு தலங்கள், புத்த மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் போன்றவையும் தரைமட்டமாக்கப்பட்டு அவற்றின் மீது முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தத்தமது கட்டுமானங்களை அமைத்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகள் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கெனவே இருந்த மதரீதியான கட்டுமானத்தை இடித்து விட்டு மற்றொரு சமய ரீதியான கட்டுமானம் எழுப்பப்பட்டுள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டால் உரிய பரிகார நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதோ அல்லது அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்வதோ எவ்வாறு தவறாக இருக்க முடியும்? என்பதே மனுதாரர்களின் வலுவான வாதமாக உள்ளது.

மதுராவில் உள்ள ஸாகி இத்கா மசூதி குழு எதிர்வாதத்தை முன்வைத்துள்ளது. இப்போதுள்ள நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும். மாற்றம் எதையும் செய்யக்கூடாது என்று முஸ்லிம் தரப்பு வற்புறுத்தி வருகிறது. இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை அளிக்கப்போகிறது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது திண்ணம்.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி