திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு இணையாக அருணை வெங்கட் என்பவரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளது, திமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவருக்கு நெருங்கியவர்களின் இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மகன் கம்பன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
இதில் திடீர் திருப்பமாக திருவண்ணாமலையைச் சேர்ந்த `அருணை கன்ஸ்ட்ரக் ஷன்’ உரிமையாளர் வெங்கட் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சிறு கட்டுமானம் மற்றும் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டுவந்த அருணை வெங்கட்டுக்கு, திமுக, அதிமுக முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதனால் தனது தொழிலை மேம்படுத்திய அவர், அதிமுக ஆட்சியில் முக்கியப் பிரமுகர்களுக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார்.கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் படிப்படியாக வளர்ந்தார் அருணை வெங்கட்.
சொத்து மதிப்பு உயர்ந்தது? 2021-ல் திமுக ஆட்சியைப் பிடித்தபோது, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எ.வ.வேலு பொறுப்பேற்றார். இதையடுத்து, மாவட்ட திமுக அலுவலகத்தில் கால்பதித்தார். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையில் முன்னணிஒப்பந்ததாரராக மாறினார் அருணை வெங்கட். பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளைமேற்கொண்டு வரும் இவரது சொத்து மதிப்பும் கிடுகிடுவென உயர்ந்தது. இவரது அசுர வளர்ச்சியை கண்டு திமுகவினர் பிரமித்துப் போயுள்ளனர்.
இந்நிலையில்தான், அருணை வெங்கட் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். கணினிகளில் உள்ள தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், முக்கிய ஆவணங்கள், ரொக்கம் சிக்கியுள்ளதாகவும், பல வங்கிகளின் லாக்கர்களில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, அருணை வெங்கட்டின் தொழில் சார்ந்த முதலீடுகள் குறித்து அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு இணையாக, அருணை வெங்கட்டையும் இலக்குவைத்து வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளது, திருவண்ணாமலை மாவட்ட திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.