வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

சென்னையில் பிரதமர் மோடி குறித்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சர்ச்சைக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாரத பிரதமர் கொண்டு வந்திருக்கும் இந்த 10 சதவீத உள்ஒதுக்கீடு நிச்சயமாக செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பா.ஜ.க வரவேற்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் போகும். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் சட்டநாதன் கமிஷனை கொண்டு வந்தபோது, தி.மு.க விஷமத்தனமான பிரச்சாரம் செய்தது. அதேபோல 2002ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை சட்டமாக்கியபோதும் அதை எதிர்த்தும் விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப்பட்டது. தற்போது பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு வந்தால், ஏற்கெனவே இட ஒதுக்கீடு சலுகை பெறுபவர்களுக்கு எல்லாம் பாதிப்பு, ஓ.பி.சி பிரிவில் இருப்பவர்களுக்கெல்லாம் பாதிப்பு என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், அதுபோல எதுவுமே கிடையாது. மத்திய அரசு ஏற்கனவே இடஒதுக்கீடு சலுகை வழங்கியவர்களின் உரிமைகள் எதுவும் பறிபோகாது. இதை காலம் காலமாக சொல்லி வந்தாலும், இதனை எதிர்த்து தமிழகத்தில் தி.மு.க ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தை கையிலெடுத்தது, உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டது. பொருளாதார அடிப்படையில் பின்தங்கி கஷ்டபடுகிறவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இதனை கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்றம் சரித்தரப் புகழ் வாய்ந்த இந்த தீர்ப்பின் மூலம் அதை அங்கீகரித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது” என்று கூறினார்.