வயலுக்கு வரப்பு,சுதந்திரத்திற்கு வரம்பு!

சமீப காலமாக பல்வேறு திரைப்படங்களை பற்றிய சர்ச்சைகள் சகஜம். ஆனால் இந்த சர்ச்சைகளில் மத்திய அரசை இழுப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசாக இருந்தாலும் ஆட்சி பீடத்தில் அமர்ந்தபின் இந்திய அரசியல் சாஸனப்படி இயங்கும். மத்தியில் ஆளும் பாஜக அரசும் விதிவிலக்கல்ல.

ஏற்கனவே திரையிடப்பட்ட மெர்சல், விரைவில் திரைக்கு வரவிருக்கும் பத்மாவதி போன்ற திரைப்படங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு பரவலாக எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை.

திரைப்படத்தின் மூலமாக சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை எளிதாகச் சென்றடையும். அதே நேரத்தில் திரைப்படத்தில் சொல்லப்படும் கருத்துக்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு சமுதாயத்தையும் அல்லது எவர் மனதையும் புண்படுத்தும் விதமாகவோ வன்முறையைத் தூண்டும் விதமாகவோ அமையக்கூடாது என்பதை தயாரிப்பாளர்கள் மனதில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

பொறுப்பற்ற கருத்து சுதந்திரம் என்பது நாட்டின் சமூக நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் குலைக்கும் விதமாக அமையக்கூடாது என்பதன் காரணமாகவே அரசு, மத்திய திரைப்பட வாரியத்தில் திரைப்படத்தினர் துறையினர் மட்டுமல்லாது, மற்ற அனைத்துத் துறைகளில் உள்ள வல்லுநர்களையும் நியமித்துள்ளது.

தற்போது சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படம் வெளியிட வாரியத்திற்கு விண்ணப்பித்தார்கள்; பத்மாவதி திரைப்படத்தின் மூலக்கதை கற்பனையா அல்லது வரலாற்றிலிருந்து எடுத்து தொகுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு தயாரிப்பாளரோ, இயக்குநரோ இதுவரை எவ்வித பதிலும் அளிக்காமல் இருப்பது அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது.

அது மட்டுமல்லாது, பத்மாவதி படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பே படத்தின் முன்னோட்டத்தை கூகுல் இணையதளத்தில் வெளியிட்டதில் தணிக்கைக் குழுவிற்கு சிறிதளவும் உடன்பாடில்லை.

எனவே திரைப்படம் என்பது மக்கள் துயரை மறக்கடிக்கும் பொழுதுபோக்கு அம்சம், கலையாகக் கருதி ரசிக்க வேண்டுமே தவிர, கருத்து சுதந்திர உரிமை என்ற அடிப்படையில், யாரும் தவறாக எந்தவொரு அரசியல் நோக்குடனோ சுயநல விளம்பரமாகவோ அல்லது தேசிய ஒருமைப்பாட்டை குலைக்கும் நோக்குடனோ எதையும் யாரையும் விமர்சித்தல் கூடாது.

(கட்டுரையாளர்  மத்திய அரசு திரைப்பட வாரிய  தணிக்கைக் குழு உறுப்பினர்)