வன கல்லுாரியில் இடம் கிடைத்தும் சேர முடியாத ஏழை மாணவி

அரசு வன கல்லுாரியில் இடம் கிடைத்தும், பணம் கட்ட முடியாமல், பெற்றோரை இழந்த ஏழை மாணவி, பரிதவித்து வருகிறார்.சேலம் மாவட்டம், குப்பம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பாக்கியலட்சுமி.

பிரச்னை

இவர்களது மகள்கள், மோகனப்ரியா, 23, கவிதா, 20, பிரபாவதி, 17. கடைசி மகள் பிறந்த, 15ம் நாளில், குடும்ப பிரச்னையில், வெங்கடேசன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மோகனப்ரியா, பி.ஏ., ஆங்கிலம் முடித்து, திருமணம் முடிந்து, தனியாக வசிக்கிறார். இரண்டாவது மகள் கவிதா, பி.எஸ்சி., கணிதம் முடித்து, தற்போது வீட்டில் உள்ளார். கடந்தாண்டு, பாக்கியலட்சுமி, உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

தாய், தந்தையற்ற இரு தங்கைகளை, மூத்த சகோதரி மோகனப்பிரியா பராமரித்து வருகிறார். பிரபாவதி, ஜலகண்டாபுரம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பில், 500க்கு, 494 மதிப்பெண் பெற்றதால், அவரை, இளம்பிள்ளையில் உள்ள, சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி நிர்வாகம், இலவசமாக, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க வைத்தது.

பிளஸ் 2வில், 600க்கு, 557 மதிப்பெண் பெற்று, கோவை வேளாண் பல்கலையில் சேர விண்ணப்பித்தார். கலந்தாய்வில், கோவை, மேட்டுப்பாளையம் அரசு வன கல்லுாரியில், பி.எஸ்சி., வனம் படிக்க இடம் கிடைத்தது.சிரமம்ஆண்டுக்கு, 45 ஆயிரம் ரூபாய் கட்டணம்; முதல் தவணையாக, மோகனப்ரியா, தன் நகையை விற்று, 20 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். ஆனால், பட்டப் படிப்புடன், தங்கும் விடுதி கட்டணம் என, ஆண்டுக்கு, 1 லட்சம் வீதம், நான்காண்டுக்கு, 4 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

தாய், தந்தையின்றி, அக்காள் தயவில் படித்து வந்த பிரபாவதி, கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.

மோகனப்ரியா கூறியதாவது:

வாடகை வீட்டில், கணவருடன் இணைந்து, ஒரே விசைத்தறியில் இருவரும் பணிபுரிந்து, இரு தங்கைகளை பராமரித்து, படிக்க வைக்க சிரமமாக உள்ளது.நல்ல மதிப்பெண் பெற்று, அரசு வன கல்லுாரியில் சேர இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த வசதியில்லாததால், தங்கையை படிக்க வைக்க முடியாத நிலை உள்ளது. யாராவது உதவினால், படிக்க வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.உதவ நினைப்பவர்கள், 82482 55763 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.