வந்தே மாதரம் தேசிய உணர்வை தட்டியெழுப்பிய நாதம் ஆன கீதம்

ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியாக தோன்றி 150 ஆண்டுகள் ஆகும் இந்த இனிய தருணத்தில், வந்தே மாதர கீதம் தேசியப் பாடலாக அரியணை அமர்ந்தது. பாரத அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள் பாரத மக்கள். வந்தே மாதரம் பிறந்து வளர்ந்து, மக்கள் மனதில் கோயில் கொண்ட வரலாற்றை ஆவணங்களிலிருந்து தொகுத்தளிக்கிறார் பெரியசாமி. பின்னாளில் நாட்டை வெட்டி பிளந்தவர்கள், அந்நாளில் வந்தே மாதர பாட்டை வெட்டிப்பிளந்த குரூர வரலாற்றையும் வாசகர்கள் முன் வைக்கிறோம்…

 

வந்தே மாதரம் பாடல் இயற்றிய பங்கிம்சந்திரர், தனது எழுத்துக்காக மிகவும் பிரபலமானவர். 1884ல் ஆதார்சந்திர சென் வீட்டில் அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். பங்கிம்சந்திரர் “பங்கிம், நீங்கள் ஏன் பங்கிம்?” என்று கேட்டார் (வங்காளியில் “பங்கிம்” என்ற வார்த்தைக்கு “வளைந்த” என்று பொருள்). “பிரிட்டிஷ்காரன் அடித்த அடி காரணமாக,” பங்கிம் புன்னகையுடன் பதிலளித்தார்.

அவர் பல ஆண்டுகள் துணை நீதிபதியாக பணியாற்றினார். அந்த சேவைக் காலத்தில் அவர் பெற்ற அனுபவங்கள், அவமானகரமான சம்பவங்கள், அநீதியின் கதைகள், இவை அனைத்தால் உள்ளக் குமுறல் ஆகியவை இந்த பதிலில் பிரதிபலித்தது போல் தோன்றியது. பங்கிம், ராமகிருஷ்ணரை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.  ராமகிருஷ்ணர் தான் செல்லாமல் நரேந்திரரை அனுப்பினார். சுவாமி விவேகானந்தர் தாய்நாட்டின் வடிவத்தில் சக்தி தேவதையை ஆராதித்து வந்தவர். தேசத்தை எழுப்ப துறவிகளையும் தூண்டியவர். அவரது சகோதரரும் புகழ்பெற்ற புரட்சியாளருமான பூபேந்திர தத், “தூங்கிக் கொண்டிருந்த பாரத சமுதாயத்தை எழுப்பி, அதற்கு சரியான திசையை வழங்குவது அவரது வாழ்க்கைப் பணி. அவரது தேசிய லட்சியத்தை பங்கிம் எழுதிய ‘ஆனந்த மடம்’ புரட்சிகர நாவல் சித்தரிக்கிறது” என்றார்.

ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் டாக்காவிற்கு விஜயம் செய்தார். இளைஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு இளைஞர் அவரிடம், “நாம் என்ன படிக்க வேண்டும்?” என்று கேட்டார். சுவாமிஜி உடனடியாக, “பங்கிம்! ஆம், பங்கிம், பங்கிம் எழுத்தைப் படியுங்கள். பங்கிம், பங்கிம்! பங்கிமை மட்டும் படியுங்கள்” என்று பதிலளித்தார்.

அவர் தனது சீடரான நிவேதிதாவை தாய்நாட்டிற்கான அர்ப்பணிப்பின் உணர்ச்சி மிக்க உன்னத உதாரணமாக மக்களுக்குக் காட்டினார். அவர் நிவேதிதையிடம், “உன் வாழ்க்கையை அன்னையின் சேவைக்காக அர்ப்பணித்திடு” என்று கூறினார். இதுவே சேவை செய்வதற்கான சிறந்த வழி அவருக்கு.

உயிர் பிரியும் போதும் வந்தேமாதரம்!

புரட்சியின் முன்னோடியான வாசுதேவ் பல்வந்த் பட்கே, ஈடன் சிறையில் மரணத்தை எதிர்கொண்டார். மரணத்தின் கயிறு அவரைப் பற்றிக் கொண்டிருந்தது. ஒரு கணம், மரணத்தின் தூதர்கள் கூட நடுங்கினர்.

சித்திரவதை, அழுகை, தப்பிக்க வீண் முயற்சிகள் ஆகியவற்றால் கலங்கிய முகங்களை எப்போதும் பார்த்தவர் அவர். ஆனால் அவர் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை, அதுவே அறைகூவல் ஆனது. நன்றி பொங்க அவரது உதடுகளில் “வந்தே மாதர” மந்திரம்!

மகரிஷி அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தரும் “வந்தே மாதரம்” தந்த உணர்வால் ஈர்க்கப்பட்டார். அவர் “வந்தே மாதரம்” என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். “இந்து பிரகாஷ்”ல் “வந்தே மாதரம்” பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார். இது “வந்தே மாதரம்” என்பதன் முதல் தத்துவ விளக்கம். பங்கிம் தனது தாய்நாட்டை “தாய்” என்று அழைத்ததாக அரவிந்தர் கூறுகிறார். “வந்தே மாதரம்” என்பது உயிர் கொடுக்கும் மந்திரம். “வந்தே மாதரம்” என்பது நமது சுதந்திரப் போராட்டத்தின் ஆயுதம். அவரது “பவானி மந்திர்” என்ற புத்தகமும், பங்கிம் சந்திரரின் ‘ஆனந்தமட’த்தை அடிப்படையாகக் கொண்டதே.

கவிஞரின் கனவு

இதயத்தைத் தொடும் பாடல் “வந்தே மாதரம்”. பாடல் இயற்றப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அப்போதைய பிரபல பாடகர் யதுநாத் பட்டாச்சார்யா மல்ஹார் ராகத்திலும், கவ்வாலி தாளத்திலும் இசையமைத்தார். நண்பர்கள் கூட்டத்தில் அவர் இதைப் பாடினார். இந்தப் பாடல் சமஸ்கிருதம், வங்காளி ஆகிய இரண்டு மொழிகளின் சங்கமம்.

“இந்தப் பாடல் மிகவும் கடுமையாக ஒலிக்கிறது,” என்று ஒருவர் கூறினார். இன்னும் சிலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். பங்கிம் சந்திரர் பொறுமையாகக் கேட்டார். பாடலின் ஒளிமயமான எதிர்காலத்தில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அவர் ஒருமுறை தனது மகளிடம், “இந்தப் பாடலுக்கு வங்காளம் நடனமாடும் ஒரு நாள் வரும். வங்காளம் மட்டுமல்ல, முழு இந்துஸ்தானமும் இதிலிருந்து உத்வேகம் பெறும். முழு தேசமும் ஒன்றுபட்டு இந்தப் பாடலை பாடும்” என்று சொன்னார். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான், பங்கிம் பாபுவின் வார்த்தைகள் உண்மையாகின.

ஆனந்தமடம்
நாடக வடிவில்

‘ஆனந்தமடம்’ வங்காள இலக்கிய மரபிலிருந்து பிரிந்து, ஒரு புதிய சூழலில் ஒரு புரட்சிகர நாவலாக வெளிப்பட்டதால் மிகவும் பிரபலமடைந்தது. 1882 முதல் 1895 வரை, பங்கிம் சந்திரரின் வாழ்நாளில் அதன் ஐந்து பதிப்புகள் வெளியிடப்பட்டன. 1900 வாக்கில், ஆனந்தமடம் ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பாரத மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பிரபலத்தைப் பயன்படுத்தி, 1883 ஆம் ஆண்டில், பிரதாப் ஜோஹ்ரியின் தேசிய நாடக அரங்க தலைவர் கேதார்நாத் சவுத்ரி, அதை ஒரு நாடகமாக மாற்றியமைத்து, அதே ஆண்டு அரங்கேற்றினார். அதில்,  தேவ்காந்த் பக்ஷி ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு திலக் காமோத் ராகத்தில்  இசையமைத்தார்.

தாகூரின்
“பாலக்” இதழில்

ரவீந்திரநாத் தாகூரை ஆசிரியராகக் கொண்ட “பாலக்” என்ற பத்திரிகையின் பாடல் பயிற்சி பத்தியில், 1885ல் வந்தேமாதரம் பாடலை வெளியிட்டார், பிரதிபா சுந்தரதேவி. இறுதியில், பாடுவது மிகவும் கடினம் என்பதால், இந்தப் பாடலை முழுமையாக வெளியிட முடியவில்லை.

தாகூர் குடும்பத்தின் பத்திரிகையில் வந்தே மாதரத்திற்கு “பிரபலமான பாடல்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது, அதன் முக்கியத்துவத்தையும் புகழையும் குறிக்கிறது.

1885 ஆம் ஆண்டில், ஏ.வி. ஹியூம் “ஒரு பாதுகாப்பு வால்வாக்கி” கையாள காங்கிரஸை நிறுவினார். அடுத்த ஆண்டு, காங்கிரஸ் அமர்வு கல்கத்தாவில் நடைபெற்றது.

மறுநாள், ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ஹேமச்சந்திர பந்தோபாத்யாய் “ராக்கி பந்தன்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி மாநாட்டில் வழங்கினார். இந்த இசையமைப்பில் அவர் ‘வந்தே மாதரம்’ எனும் சொல்லையும், ‘வந்தே மாதரம்’ பாடலின் பல சொற்களையும் பயன்படுத்தினார்.

முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பாடப்பட்டது. இனிமையான குரலில் அனைவரும் ‘வந்தே மாதரம்’ பாடினார்கள்.

‘வந்தேமாதரம்’ என்ற அந்தச் சொல் பாவலர், பாமரர் அனைவரையும் நெகிழ வைத்தது, அதாவது படிப்படியாக இந்த பாடல் அதன் வசீகரத்தை பரப்பத் தொடங்கியது.

தேசிய கீதத்திற்கு மரியாதை

காங்கிரஸ் கூட்டத்தொடர்கள் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடத்தப்பட்டன. 1896ல், 12வது காங்கிரஸ் மாநாடு ரவீந்திர கானன் என்றும் அழைக்கப்படும் பீடன் கார்டனில் நடைபெற்றது. முகமது ரஹிமதுல்லா சயானி தலைவராக இருந்தார். இந்த மாநாட்டில், வெண்ணிற உடையில் வந்த தாகூர் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடினார்.

கவிஞரின் இனிமையான, சக்திவாய்ந்த குரல் மண்டபம் முழுவதும் எதிரொலித்தது. அதைக் கேட்டதும், மக்களின் இதயங்கள் நெகிழ்ச்சியடைந்தன, அவர்கள் தேசபக்தி உணர்வுகளால் நிரப்பப்பட்டனர். இந்த அமர்வில், ‘வந்தே மாதரம்’ தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, காங்கிரஸ் மேடையில் ‘வந்தே மாதரம்’ தொடர்ந்து பாடப்பட்டது.

இவ்வாறு ஒரு கீதம் வலுவான தேசிய உணர்வை எழுப்பிய நாதம் ஆனது.