இந்த பேச்சைக் கேட்டாலே தேசநலனில் அக்கறை உள்ளவர்களுக்கு பரவசம். சில எதிர்க்கட்சிகளின் வயிற்றிலோ அமிலம். மோடியின் 3 வது ஆட்சிக்காலத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நிறைவேற வேண்டும் என்பதே நம் ஆவல். ஆம், நாடு முழுவதும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாநில சட்டமன்றங்களுக்கும் லோக்சபாவிற்கும் ஒருசேர தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த செப்டம்பரில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் நோக்கமாக’ மாறி வரும் சமூக – பொருளாதார – தேசிய தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருதல்’ என்று அறிவித்தனர். அதன்படி, குழு முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள், தேர்தல் ஆணைய தலைமை அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், 47 அரசியல் கட்சிகள், தொழில்துறை அமைப்புகள், பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் என்று பல தரப்பினரையும் கலந்து ஆலோசித்தது. இணைய வழியில் 21,558 பேர் தங்கள் கருத்தை அனுப்பியிருந்தனர். இவ்விதமாக குழு முனைப்புடன் செயல்பட்டு, இந்த வருடம் மார்ச் 15 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், “தென்னாப்பிரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து போன்று உலகின் பல நாடுகளிலும் உள்ள ஜனநாயக தேர்தல் நன்னெறிகளையும் உற்று நோக்கினோம். எங்களிடம் கருத்து தெரிவித்தவர்களில் நிபுணர்கள் – பொது மக்கள் – கட்சியினர் ஆகியோரில், 80 சதவீதம் பேர் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற ஆலோசனையை ஏற்கிறார்கள். எங்கள் பரிந்துரையும் அதுவே. நிறைவேற்றுவதற்குத் தேவையான அரசியல் சாஸன திருத்தங்களையும் – நடைமுறைச் சீர்திருத்தங்களையும் பட்டியலிட்டுள்ளோம் ” என்றார்.
1967 வரை முதல் நான்கு பொதுத் தேர்தல்கள் அப்படித்தானே நடந்தன. முந்தைய யுபிஏ அரசின் காலத்தில் நம் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்குச் சென்ற சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைக்கப் பட்ட குழுவும் இந்த கருத்தை ஆமோதித்திருந்தது. நாம் ஏன் ஒரே நாடு ஒரே தேர்தலை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்கிறோம்?
நாடாளுமன்றத்திற்கு ஒரு தடவை, மாநில சட்டமன்றங்களுக்கு ஒரு தடவை – அதாவது வருடம் தோறும் சராசரியாக 3 முதல் 5 மாநிலங்களுக்குத் தேர்தல் நடப்பது – எல்லாம் ஏராளமான பொருட்செலவை ஏற்படுத்துகிறது. இவற்றை மிச்சப்படுத்த வேண்டியது அவசியம் தானே? ஒரு பொருளாதார சர்வே, அப்படி மிச்சப்படுத்தப்படும் தொகையை ஆக்க பூர்வமான திட்டங்களில் முதலீடு வாயிலாக நம் நாட்டின் ஜிடிபி 1.5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது என்கிறது.
அதைத் தவிர, எத்தனை அதிகாரிகள் – பணியாளர்களுக்கு – ஆசிரியர்களுக்கு- காவல் துறையினர் – துணை ராணுவத் துறையினர் என்று பலருக்கும் கூடுதல் பணிச் சுமை. பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் வேறு. தேர்தல் கால கெடுபிடி வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சராசரியாக 11 மாதங்கள் அதாவது ஒரு வருடம் , அரசு இயந்திரம் முடங்கிப் போகிறது. அதிகாரிகள் புதிய திட்டங்களைப் பரிந்துரைப்பது, உள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்து இவற்றில் சுணக்கம் ஏற்பட்டு கண்ணுக்குத் தெரியாமல் பெரும் நஷ்டம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக,
ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது அகில பாரத தலைவர் ஸ்ரீ குருஜி (கோல்வல்கர்) தெரிவித்ததைப் போல, தேர்தல் காலத்தில் புறப்படும் எதிர்மறைக் கருத்துக்கள், தனி நபர் விமர்சனங்கள், தரம் தாழ்ந்த தாக்குதல்கள் எல்லாம் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்துகின்றன பாருங்கள், அது தான் ஈடு செய்யவே முடியாத தேசியக் கேடு. ஐந்தாண்டுக்கு ஒரு முறை அத்தகைய நரகல் பேச்சைக் கேட்டால் போதாதா? இந்த
ஒரு காரணத்திற்காகவே உரக்கச் சொல்லுவோம், நிச்சயம் வேண்டும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’.