கிராமப்புற அரசு பள்ளிகளின் நிலை, கல்வித் தரம் மிகவும் மோசமாக உள்ளது என்று காரணம் கூறி நீட்டில் இருந்து நிரந்தர விளக்கைப் பெற முயலும் தமிழக அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி வலைக்கு மத்தியில், கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட நவோதயா பள்ளிகளை தமிழகத்திலும் அமைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு காலத்துக்கு ஏற்ற வரவு.
தேசிய கல்வி கொள்கையின் படி 1986ம் ஆண்டு மஹாராட்டிர மாநிலம் அமராவதி என்ற இடத்தில் முதல் நவோதயா பள்ளி தொடங்கப்பட்டது. இன்று தமிழகம் தவிர்த்து நாடு முழுவதும் மாவட்டத்துக்கு ஒன்று என 598 இடங்களுக்கு அனுமதி தரப்பட்டு 591 இடங்களில் முழு அளவில் இயங்கி வருகிறது.
30 ஏக்கர் பரப்பில் பறந்து விரியும் இந்த பள்ளி, 20 கோடி மதிப்பில் உலகத் தரம் வாய்ந்த கட்டுமானங்களை கொண்டது. இந்த பள்ளி ஆய்வக வசதி, நூலகம், கணினி ஆய்வகம், பேச்சுக்கூடம், விளையாட்டுத் திடல், கைப்பந்து, உதைப்பந்து, எறிப்பந்து, கூடைப்பந்து, கோ கோ, இறகுப்பந்து, கபடி, ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.
373 பள்ளிகள் (2016 நிலவரப்படி) ’ஸ்மார்ட்- நுண்ணறிவு’ (Smart Class) வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்த இங்கு அறிவியல் ஆய்வு கூட்டங்களும் கண்காட்சிகளும் அடிக்கடி நடத்தப்படும்.
நவோதயாவில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. தங்கும் விடுதிகள் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் வளாகத்திலயே உண்டு. ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கை அந்த மாநில பாடத் திட்டத்தின் படி நுழைவு தேர்வின் மூலம் நடத்தப்படும். இதில் 75% கிராமப்புற மாணவர்களுக்கும் 25% நகர்புற மாணவர்களுக்கும். இதில் 33% பெண் குழந்தைகளுக்கும், 3.5% மாற்றுத் திறனாளிகளுக்கும், 15% எஸ்.சி பிரிவு மாணவர்களுக்கும் 7.5% எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு கடைப் பிடிக்கப்படுகிறது.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் இந்தப் பள்ளி நாட்டின் உச்ச தனியார் பள்ளியின் தரத்துக்கு நிகரான கல்வியை தருகிறது. ஆனால் கட்டணமோ மிக மிக குறைவு. அதாவது 6 முதல் 8-ம் வகுப்பு வரை இலவச கல்வியையும், 9 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், எச்.சி, எஸ்.டி பிரிவினர், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு மாதம் 200 ரூபாய் வீதம், வருடத்துக்கு 2000 ரூபாய் மட்டுமே கட்டணம்.
கிராமத்து மாணவர்களுக்கு உண்மையிலேயே பயனளிக்க கூடிய இத்தகைய நவோதயா பள்ளிகளைத்தான் நாம் 30 வருடமாக புறக்கணித்து வருகிறோம். வருடத்துக்கு 2000 மாணவர்கள் என்று வைத்தால் கூட 30 வருடத்தில் 60000 கிராமத்து மாணவர்கள் மிகச் சிறந்த மருத்துவர்களாக, பொறியாளர்களாக, கல்வியாளர்களாக உருவாகி இருப்பார்கள். இந்த வருடம் நீட் எழுதிய 14,183 மாணவர்களில் 11,875 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 7,000 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
ஆனால் நாமோ இங்கு ஹிந்தி திணிக்கப்படுகிறது என்று பொய்யுரைத்த ஒரு கூட்டத்துக்கு ஆதரவு தந்து பல்லாயிரம் அனித்தாக்களை ஏற்கனவே கொன்று விட்டோம், இன்றும் அதைத் தொடர்கிறோம். உண்மையில் நவோதயாவில் ஹிந்தி திணிக்கப்பட வில்லை. ஆங்கிலம் துணை மொழி என்றால், ஹிந்தி விருப்ப மொழி அவ்வளவே.