வடிவங்கள் பல அருள் ஒன்றே

பல இறை ரூபங்களை சிலை வடிவில் வடிக்கும்போதோ, அல்லது வரையும்போதோ புராணங்கள், காவியங்கள் போன்றவற்றில் குறிக்கப்பட்டுள்ள வரையறைக்குள்தான் மேற்கொள்ள முடியும். அங்க லக்ஷணங்கள் இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த உடைதான் பெருமாளுக்கு, இந்த வஸ்திரம்தான் சிவபிரானுக்கு, இந்த நிறம்தான் கண்ணபிரானுக்கு, இந்த நிறம்தான் அம்பாளுக்கு என்றெல்லாம் எழுதப்பட்டுள்ள வரையறையைப் பின்பற்றுகிறோம். ஆனால் சிலை வடிப்பது, பிள்ளையார் பிடிப்பது, ஓவியம் வரைவது என அனித்திலும் பரிபூரண சுதந்திரம் எடுத்துக்கொள்ள நமது கணேசமூர்த்தி நம்மை அனுமதித்து விடுகிறார்.

விநாயகப்பெருமான் அம்மையப்பனை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற ஊர் திருவலம் என்பர். வேலூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தூரத்தில் உள்ளது இத்தலத்தில் வலம்வந்த விநாயகரை தரிசிக்க, வல்வினைகள் யாவும் நீங்கும். விநாயகர் திருக்கரத்தில் மாவிலை ஏந்தி அருள் புரியும் காட்சியை முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள சூதவனம் ஆலயத்தில் தரிசிக்கலாம். ஜெயன்கொண்டாம் அருகே ஸ்ரீவைரவனீஸ்வரர் திருத்தலத்தில் வில் ஏந்திய கணபதியை காணலாம். பேரையூர் தாலுக்காவில் உள்ள பூலாம்பட்டி  மத்தங்கரை ஆலயத்தில் விநாயகர் கோடரி ஏந்தி காட்சி தருகிறார். சங்கரன்கோவிலில் சர்ப்ப விநாயகர் தமது இருகரங்களிலும் சர்ப்பங்களை ஏந்தி காட்சி தருகிறார்.

கையில் வேலுடன் விநாயகர் காட்சி தரும் திருக்கோலத்தை ராஜபாளையம் அருகே பருத்திக்காட்டுப் பகுதி திருத்தலத்தில் தரிசிக்கலாம். தம் இரு கரங்களிலும் கொழுக்கட்டை ஏந்தி அருள் புரியும் விநாயகரை சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சில ஆலயங்களில் காணலாம். பெண் தெய்வங்கள் வடிவிலும் சில ஸ்தலங்களில் விநாயகர் அருள் புரிகிறார். இவர்கள் ஷக்தி கணபதி, விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கஜானினி, ஐங்கினி முதலிய நாமகரணங்களால் அழைக்கப்படுகிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன் மண்டபத்தில் வியாக்ர சக்தி விநாயகர் உள்ளார். முகம் யானை வடிவத்திலும், கால் முதல் இடை வரை புலி வடிவத்திலும், இடை முதல் கழுத்துவரை பெண் வடிவத்திலும் கொண்டு அருள் புரிகிறார்.

பவானியில், ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ சௌந்தரநாயகி சந்நிதியின் மேல் மண்டபத்தில் கையில் வீணையுடன் காட்சி தரும் விநாயகி உருவத்தைக் காணலாம். நவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகரை, வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யாண மண்டபத்தில் தரிசிக்கலாம். சென்னை மீஞ்சூருக்கு அருகில் உள்ள செட்டிப்பாளையத்தில் விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை, ‘வலஞ்சை விநாயகர்’ என்கின்றனர்.

ஆழத்துப் பிள்ளையார், பாதாள பிள்ளையார் என்ற பெயர்களில் சில ஸ்தலங்களில் மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றுள்ளார் விநாயகர். காளஹஸ்தி சிவாலயத்திலும் விருத்தாசலம் கோயிலிலும் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன. தும்பிக்கை இல்லாமல் காட்சி தரும் ஆதி விநாயகரை மயிலாடுதுறை திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள திலதர்ப்பணபுரியில் தரிசிக்கலாம். ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழி பட்ட பிறகே கோயிலுக்குள் செல்லவேண்டும் என்பது மரபு. மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள்கிறார் பஞ்ச விருட்ச கணபதி.

சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோ அருகே உள்ள கோயிலில் விநாயகர் உருவத்தில் பல கணேசர் வடிவங்கள் இயற்கையாகவே விருட்சத்தில் உருவாகியுள்ளதால் இந்தக் கோயிலுக்கு என்று அருள் பெற விழைவோர் பலர். தாமரை மலரில் அமர்ந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார் திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்.

பச்சோந்தி விநாயகர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கன்னியாகுமரி மாவட்டம் கேரளபுரம் மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி  தருகிறார். நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்றே வழிபடுகின்றனர். திருவையாறு கோயிலில் அருள்கிறார் ஓலமிட்ட விநாயகர். நள்ளிரவில் ஓலமிட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதை ஊர்மக்களுக்கு உணர்த்திக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம். இதே தலத்தில் லிங்கத்தின் ஆவுடைப் பகுதியின் மீது அமர்ந்தருளும் ஆவுடைப் பிள்ளையாரை தரிசிக்கலாம்.

பிள்ளையார்பட்டி விநாயகருக்கு வெள்ளை ஆடைமட்டுமே அணிவிக்கின்றனர். திருவையாறு சாலையில் உள்ள திருவேதிக்குடி வேத விநாயகர், வேதங்களை காது கொடுத்துக் கேட்கும் பாவனையில் சற்றே செவி சாய்த்து அமர்ந்திருக்கிறார். இவரை, செவி சாய்த்த விநாயகர் என்றும் அழைக்கின்றனர். திருமேனி முழுவதும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்புள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக்குடி ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார் விருச்சிக விநாயகர்.

கும்பகோணம் திருவலஞ்சுழியில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு வெள்ளைப் பிள்ளையார் என்று பெயர். இவரின் விக்கிரகத் திருமேனி கடல் நுரையால் செய்யப்பட்டது என்பது ஐதீகம். திருவாரூர் கோயிலில் அருளும் ஐங்கலக் காசு விநாயகர் விக்கிரகத்தை, சோழ மன்னர் ஒருவர் ஐந்து கலம் பொற்காசுகளைக் கொண்டு செய்ததாக ஐதீகம். செய்யார் தலத்தில் நர்த்தன விநாயகரை தரிசிக்கலாம். ஒரு காலத்தில் வேதம் ஓதுதலை முனிவர்கள் மறந்துவிட, இங்கு விநாயகரே வேதியராக வந்திருந்து, வேதம் ஒலித்து வீரநடனம் ஆடினாராம். தேரழுந்தூரில் வழிகாட்டி விநாயகர் அருள்புரிகிறார். இங்கு வந்த திருஞானசம்பந்தருக்கு, சிவாலயம் செல்ல வழிகாட்டினாராம் இந்தப் பிள்ளையார். ஆந்திர மாநிலம் சைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் போது, அருகில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்கு சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் சைலத்துக்கு சென்று வந்ததற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி என்பதால், இவரை சாட்சி கணபதி என்கின்றனர்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி