”திருப்பூரில் ஆயிரக்கணக்கான வங்கதேசத்தினர் வந்து குவிகின்றனர். அவர்களை அரசு ஆய்வு செய்ய வேண்டும்; உளவுத்துறை சரியாக இயங்க வேண்டும்,” என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
வேலுார் அடுத்த மங்காபுரத்தில், சென்னை மண்டல ஹிந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு ஆளுமை பண்பு பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்ற அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:
இந்தியாவில் ஹிந்துக்கள், 8 சதவீதம் குறைந்துள்ளனர். முஸ்லிம்கள் 43 சதவீதம், கிறிஸ்துவர்கள் 5 சதவீதம் அதிகரித்துள்ளனர் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அன்னுாரில், வணிக தயாரிப்பு நிறுவனங்களில் வங்கதேசத்தினர் ஊடுருவி உள்ளனர். வேலைக்கு ஆயிரக்கணக்கான வங்கதேசத்தினர் வந்து குவிகின்றனர். அவர்களை அரசு ஆய்வுசெய்ய வேண்டும். உளவுத்துறை சரியாக இயங்க வேண்டும். நைஜீரியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் குடிமகன்கள் வாயிலாக, தமிழகத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் வருகின்றன. தமிழகத்தில் கல்லுாரி வாசல்களில் போதை பொருள் எளிதாகக் கிடைக்கிறது. பெண்களிடமும் போதை பழக்கம் பரவி வருகிறது. போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு, போதை பொருளை தாராளமாக விற்பனை செய்ய அனுமதி அளிக்கின்றனர்.
கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல், கோவில் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.