திருச்சி அருகே முள்ளிக்கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர், திருச்செந்துறை கிராமத்தில் அவருக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தை விற்பதற்காக பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு, ‘நீங்கள் பத்திரம் பதிய வந்திருக்கும் நிலம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. வக்பு வாரிய உத்தரவுபடி, இந்த பத்திரத்தை பதிய முடியாது. வக்பு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மொத்த கிராமமும் தங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் பத்திரப்பதிவு துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கிராமத்தில் உள்ள நிலத்திற்காக பத்திரம் பதிய வருவோர் அனைவரும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என கூறியுள்ளது’ என்று சார் பதிவாளர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது ‘இது தொடர்பாக தீர விசாரிக்க வேண்டும். அதன்பின்பே இதில் முடிவெடுக்க முடியும்’ என கூறியுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த திருச்சி மாவட்ட பா.ஜ.க பிரமுகர் அல்லுார் பிரகாஷ், திருச்செந்துறை ஹிந்துக்கள் நிறைந்த விவசாய கிராமம். இங்கு, 1,500 ஆண்டுகள் பழமையான பாடல் பெற்ற மானேந்தியவல்லி சமேத சந்திரசேகர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு திருச்செந்துறை கிராமத்திலும், கிராமத்துக்கு வெளியேயும், 369 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. அவர்கள் கூற்றுப்படி இந்த கோயில் நிலமும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதா? ஆவணங்கள் தனிநபர்களுக்கு சொந்தமானதாக இருக்கும்போது, அடிப்படை ஆதாரமே இல்லாமல், வக்பு வாரியம் எப்படி அறிவிக்க முடியும்? வக்பு வாரியம் கடிதம் அனுப்பினாலும் அதை சரிபார்க்காமல், பத்திரப் பதிவு துறை உயர் அதிகாரிகள், பத்திரம் பதியக் கூடாது என்று எப்படி உத்தரவிட்டனர்? என கேள்வியெழுப்பினார். கிராம மக்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.