ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய கூட்டாளி அமித் கத்யால், லாலு குடும்பம் சார்பில் ஏராள மானோரிடம் இருந்து நிலங்களை அபகரித்துள்ளது, அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மத்தியில், 2004 – 2009 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடமிருந்து நிலத்தை அவர் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, பீஹாரின் பாட்னாவில் உள்ள லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி உள்ளிட்டோர் வீடுகளில், கடந்த மார்ச் மாதத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய கூட்டாளி அமித் கத்யால் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 11ம் தேதி அமித் கத்யாலை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
‘ஏ.கே.இன்போசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குனராக அமித் கத்யால் இருந்துள்ளார். இந்நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரி, புதுடில்லியில் உள்ள லாலு பிரசாத் வீட்டின் முகவரியாகும். ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்த போது, நிறுவனத்துக்கு நிறைய சலுகைகளை வழங்கியதால், ரயில்வே வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து, அமித் கத்யால் நிலங்களை கையகப்படுத்தி உள்ளார்.
இதற்காக அவர், 2014ல் நிறுவனத்தின் பங்குகளை லாலு பிரசாத் குடும்பத்துக்கு மாற்றி உள்ளார். இது போல், பலரிடமிருந்து அமித் கத்யால் முறைகேடாக நிலங்களை கையகப்படுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.