சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்று சிங்கப்பூர் சென்று மருத்துவராகப் பணியாற்றியவர் லட்சுமி சாகல். கல்லூரியில் படிக்கும்போதே கதரை மட்டுமே அணியும் மாணவியாக திகழ்ந்தார். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் வழக்கிற்காக தனது கல்லூரியில் நிதி திரட்டினார். சட்ட மறுப்பு போரட்டத்தில் கலந்து கொண்டு சிறையும் சென்றார்.
இந்திய சுதந்திர லீகின் அழைப்பின் பேரில் 1943ல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் சென்றார். இந்திய சுதந்திர லீகின் சிங்கப்பூர் தலைவர் எல்லப்பாவை சந்தித்த லட்சுமி, பாரத சுதந்திரப் போராட்டத்தில் தானும் பங்கேற்க உள்ளதைத் தெரிவித்தார். அதேநேரம் நேதாஜியும் ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களும் ஆயுதப் போராட்டத்தில் சமமாகப் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்.
மறுநாள் நேதாஜியுடன் இரவு உணவு உண்ண லட்சுமிக்கு அழைப்பு வந்தது. அப்போது ஜன்சி ராணி படைக்குத் தலைமையேற்கும் தனது இசைவைத் தெரிவித்தார் லட்சுமி. உங்களால் சேலை உடையும், நீண்ட கூந்தலையும் வைத்துக் கொள்ள முடியாது என்றும் நினைவுறுத்தினார் சுபாஷ்.
தனது நட்பு, பாசம் ஆகிய தொடர்புகளை விட்டு, நாட்டுக்காக உழைக்க உறுதி கொண்டார் லட்சுமி சாகல். சிங்கப்பூர் பெண்களை கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1,500 பெண்கள் வரை சேர்ந்தனர். நேதாஜியின் ‘ஆசாத் ஹிந்த்’ அரசின் ஒரே பெண் அமைச்சராக இருந்தவர் லட்சுமி.