தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பில்களில் இலவச அரிசியில் மத்திய அரசின் பங்கு, மாநில அரசின் பங்கு, மானியம் எவ்வளவு வழங்கப்படுகிறது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் எந்த ரசீதும் வழங்கப்படுவதில்லை. இலவச அரிசியில் மத்திய அரசின் பங்கை மறைத்துவிட்டு, தமிழக அரசு நல்ல பெயரை வாங்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பொது வினியோக திட்டத்தில், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டமும், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக கூடுதல் அரிசியும், கோதுமையும் வழங்கப்படுகிறது. தமிழக அரசு திட்டத்தில் சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது. சில மாதங்களாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தனியே பில் கொடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கடைகளில் பில் வழங்கப்படுகிறது. இதன்படி, மொத்தம் எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது. அதில், மத்திய அரசின் பங்கு எவ்வளவு, இதற்கு மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு, மாநில அரசின் பங்கு மற்றும் மானியம் எவ்வளவு ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எனவும் அந்த பில்லில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பில் ஒன்றில், பயனாளிகளுக்கு 24 கிலோ ரேசன் அரிசி வழங்கப்பட்டதாகவும், அதில் மத்திய அரசின் பங்கு 20 கிலோ, அதற்கு ஒரு கிலோவுக்கு மத்திய அரசுக்கு ஆகும் செலவு ரூ.36.7 எனவும், ஒவ்வொரு பயனாளிக்கும் மத்திய அரசு வழங்கும் மொத்த மானியம் ரூ.734 எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேபோல், அந்த பில்லில் மாநில அரசின் பங்கு 4 கிலோ அரிசி, மாநில அரசுக்கு ஆகும் செலவு ரூ.39.18, மாநில அரசு வழங்கும் மானியம் ரூ.156.72 எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.அதே நேரத்தில், பில் வழங்க வேண்டும் என்ற உத்தரவு தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பின்பற்றப்படவில்லை. கணக்காளர், ஒரு துண்டு சீட்டில் எழுதி அதனை எடை போடுபவரிடம் கொடுப்பார். அவர் அதைப் பார்த்து பொருட்களை கொடுத்த பிறகு சீட்டை கிழித்து போட்டு விடுவார். அந்த துண்டு சீட்டிலும், எவ்வளவு பொருட்கள் போட வேண்டும் என மட்டுமே இருக்கும். பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி வந்தாலும், அதில், வழங்கப்பட்ட என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டது, எவ்வளவு வாங்கப்பட்டது குறித்த விவரங்கள் மட்டுமே இருக்கும். சில பொருட்களை வாங்கியிருக்காவிட்டாலும், வாங்கியதை போன்று கணக்கு காட்டும் சம்பவங்களும் நடக்கின்றன. அரிசிக்கு பதில் சர்க்கரை கூடுதலாக வாங்கினாலும், அரிசி வாங்கியதாக தகவல் வருவதாக கூறுகின்றனர்.
ரேஷன் கடைகளில் எந்த பில்லும் வழங்கப்படாததால், தங்களுக்கு மத்திய அரசு எவ்வளவு அரிசி வழங்குகிறது, மானியம் எவ்வளவு கிடைக்கிறது, மாநில அரசின் பங்கு எவ்வளவு, எவ்வளவு மானியம் வழங்குகிறது போன்ற விவரங்கள் மக்களுக்கு தெரிவது கிடையாது. ரேஷன் அரிசியை இலவசமாக மாநில அரசே வழங்குவது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கப்படுகிறது. மத்திய அரசு வழங்கும் திட்டங்களை மறைத்துவிட்டு, நல்ல பெயரை வாங்க தமிழக அரசு முயற்சி செய்யாமல், மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்திலும் அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு ரேஷன் கடைகளில் பில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.