இஸ்ரேல் நாட்டில் கட்டுமான துறைக்கு ஆட்களை தேர்வு செய்ய தெலங்கானாவில் நடத்தப்பட்ட முகாமில் 905 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.1.38 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் இண்டர்நேஷனல் (என்எஸ்டிசிஐ) உதவியுடன் தெலங்கானா மாநில அரசு இந்த ஆட்சேர்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இஸ்ரேல்-காசா போர் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இதனால், இஸ்ரேல் நாட்டில் பல துறைகளில் தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கும் – இஸ்ரேலுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி தொழிலாளர்களின் திறமையை கண்டறிவதற்காக பல்வேறு மாநிலங்களில் முகாம்கள் நடத்தி தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் ஆட்சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, தெலங்கானாவில் மூன்றாவது முகாம் நடத்தப்பட்டது. ஹைதராபாத்தில் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட இந்த ஆட்சேர்ப்பு முகாம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில், இஸ்ரேல் கட்டுமானப் பணிகளுக்காக 2,209 பேர் விண்ணப்பித்த நிலையில், பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு 905 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான மாத சம்பளம் ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.38 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் ஐ.டி. போன்ற துறைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை விட அதிகம். எனவே, இஸ்ரேலில் கட்டுமான பணிக்குச் செல்ல இந்திய தொழிலாளர்களிடையே போட்டி அதிகமாக உள்ளது. அடுத்து, ராஜஸ்தான், பிஹார் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10,000 வேலைவாய்ப்புகள்: இஸ்ரேலில் வண்ணப் பூச்சு, பீங்கான் ஓடுபதித்தல், இரும்பு வளைத்தல் உள்ளிட்ட கட்டுமான துறைகளில் சுமார் 10,000 வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும், அவர்களுக்கான ஆண்டு சம்பளம் ரூ.16.47 லட்சம் எனவும் என்எஸ்டிசி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.