ரியல் எஸ்டேட் வளர்ச்சி; தென் மாநிலங்களில் கோவை முதலிடம்!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களில், கோவை முன்னணியில் உள்ளது. ரியல் எஸ்டேட் சேவைகள் மற்றும் முதலீடு ஆலோசனை நிறுவனங்களில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள சி.பி.ஆர்.இ., நிறுவனம், இந்த மாதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை, கோவையின் வளர்ச்சியை உலகறியச் செய்துள்ளது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரண்டாம் நிலை நகரங்களில், ரியல் எஸ்டேட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வளர்ச்சியில், கோவை தென் மாநிலங்களில்முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் இந்தப் பட்டியலில் எட்டு நகரங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், தென் மாநிலங்களில் கோவை மற்றும் ஓசூர் ஆகிய தமிழக நகரங்கள் மட்டுமே இதில் இடம் பிடித்துள்ளன.

கோவையில் அதிக வளர்ச்சி பெறும் பகுதிகளையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதில், பல்லடம்-கொச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாப்பம்பட்டி, செலக்கரிச்சல், கரடிவாவி மற்றும் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில், ‘வேர் ஹவுசிங்’ எனப்படும் பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், சதுர அடி ரூ.19-22 வரை மாத வாடகைக்குக் கிடைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்ததாக, கோவை வடக்கிலுள்ள சரவணம்பட்டி, அன்னுார் இடையிலான பகுதிகளில், ‘வேர் ஹவுசிங்’, சிறு தொழிற்கூடங்கள், லாஜிஸ்டிக்ஸ் அதிகரித்து வருகின்றன என்றும், சதுர அடி ரூ.16-20 வரை மாத வாடகை என்றும் கூறப்பட்டுள்ளது. அரசூர், நீலம்பூர், கணியூர், மலுமிச்சம்பட்டி மற்றும் கணியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், குடியிருப்புகள் மட்டுமின்றி, சிறிய அளவிலான உற்பத்திக் கூடங்கள், ஜவுளி, இன்ஜினியரிங் மற்றும் வேளாண்மை சார்ந்த குடோன்கள், தொழிற்கூடங்கள் அதிகரித்து வருவதாகவும், அப்பகுதிகளில் சதுர அடி ரூ.16-18 மாத வாடகை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

பீளமேடு, விளாங்குறிச்சி பகுதிகள், முக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக வளர்வதாகக் கூறும் அந்த அறிக்கை, வேர் ஹவுசிங், தொழிற்சாலைகள் அமைப்பது, ரியல் எஸ்டேட்டில் முன்னணியில் உள்ள பல்வேறு நிறுவனங்களையும் பட்டியலிட்டுள்ளது.