அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ், ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் நேற்று வழங்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 22ல் நடக்கஉள்ளது.
இதில், பிரதமர் திர மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள், பா.ஜ., மூத்த தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.
இருப்பினும், எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில் தான், மிக முக்கிய திருப்பமாக, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபடத் துவங்கியது. புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவின் போது, ஜனாதிபதிக்கு அழைப்பில்லையா என்ற விமர்சனங்கள் எழுந்தன.
ஆனாலும், அரசு தரப்பில் அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அவரோ திறப்பு விழாவுக்கு வருவதை தவிர்த்து, வாழ்த்து செய்தி மட்டும் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், தற்போது ராமர் கோவில் விழாவில் ஜனாதிபதி பங்கேற்பாரா; அவருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விகள், கடந்த சில நாட்களாகவே புதுடில்லியில் வட்டமிடத் துவங்கின. இதற்கு விடை தரும் விதமாக, ராமர் கோவில் கட்டுமானப் பணிக்குழு தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ராம் லால் ஆகியோர், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று நேரில் சந்தித்து, ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை அளித்தனர்.