உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக கூடாரங்கள் அமைக்கும் பணிகளில் அம்மாநில அரசு ஈடுபட்டு உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அயோத்தியில் ராம ஜென்மபூமி தீர்த்த கேந்திரம் சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை வரும் ஜனவரி 22ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க, உலகம் முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்காக தங்குமிடங்கள், உணவுக்கூடங்கள், கழிப்பறைகள், மருத்துவ முகாம்கள் போன்ற அடிப்படை வசதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. ராமர் கோவில் கட்டுமான குழு மற்றும் அயோத்தி மேம்பாட்டு ஆணையம் இணைந்து, இதற்கான ஏற்பாடு பணிகளை செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமர் கோவில் அருகே மஜ்ஹா குப்தர் காட், பாஹ் பிஜேஷி, பிரஹம்மகுந்தில் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் தங்கும் வகையில் தற்காலிக கூடாரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதிகபட்சமாக பிரஹம்மகுந்தில் 30,000 பக்தர்கள் தங்கும் வகையில், 35 பெரிய கூடாரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஹ் பிஜேஷி, மஜ்ஹா குப்தர் காட் ஆகிய பகுதிகளில் தலா 25,000 பேர் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கும்பாபிஷேகம் நடைபெறும்போது உச்சபட்ச குளிர்காலம் நிலவும் என்பதால், அதற்கேற்ப பக்தர்களுக்கான கூடாரங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.