அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுமான பணியில் அஸ்திவாரப் பணிகளுக்கு தேவையான நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி வாய்ந்த கர்நாடக மாநிலத்தின் சிக்கப்பள்ளாப்பூர் கிரானைட் வகை கற்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வகை கற்களை விநியோகம் செய்ய 4 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமர் கோயில் வளாக அஸ்திவாரத்தின் அடித்தளம் 40 அடி ஆழத்தில் அமைகிறது. இதில், 5 அடி நீளம், 3 அடி தடிமன், 2.75 அடி அகலம் கொண்ட இந்தவகை கற்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக சிக்கப்பள்ளாப்பூர் கற்கள் 1,500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்பட்டும் 24 மணி நேரத்துக்கும் மேலாக உறைபனி வெப்பநிலையில் வைக்கப்பட்டும் சோதித்து தேர்வு செய்யப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் சிக்கப் பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கற்கள் நமது நாட்டில் கிடைக்கும் கற்களிலிலேயே மிகவும் உறுதியானவை. இந்த கற்கள் நிலநடுக்கத்தையும் தாங்கும் சக்தி படைத்தவை. இதனால் பெரும்பாலான முக்கிய கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு இங்கிருந்து கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. இதனால் இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.