நம் ராணுவ தளவாடங்களை இணைந்து மேம்படுத்தவும், தயாரிக்கவும் தேவையான ராணுவ தொழில் துறை கூட்டாண்மை ஒப்பந்தத்தை இந்தியா – பிரான்ஸ் உறுதிபடுத்தி உள்ளன.
விண்வெளி, இணையவெளி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையிலும் இணைந்து செயல்பட இருநாட்டு தலைவர்கள் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. புதுடில்லியில் நேற்று நடந்த குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், நேற்று முன்தினம் ராஜஸ்தான் வந்தார்.
அங்கு பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகள் இடையே பல்வேறு உடன்படிக்கை ஏற்பட்டது. இதுகுறித்து நம் வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ரா நேற்று கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் சந்திப்பின் போது, இஸ்ரேல் – காசா போர் குறித்து விவாதிக்கப்பட்டது. செங்கடல் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியா – பிரான்ஸ் ராணுவ தளவாட தயாரிப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து தலைவர்கள் உறுதி அளித்தனர். விண்வெளி, இணைய வெளி, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இணையவெளி குற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட உடன்படிக்கை ஏற்பட்டது.
டாடா மற்றும் பிரான்சின் ஏர்பஸ் நிறுவனம் இணைந்து, எச் – 125 ரக ஹெலிகாப்டர்களை கூட்டாக இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், செயற்கைக்கோள் நிலைநிறுத்துவதில், ‘நியூ ஸ்பேஸ் இந்தியா’ மற்றும் பிரான்சின், ‘ஏரியான்ஸ்பேஸ்’ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, பிரான்சின் மிக முக்கிய தனியார் விமான தயாரிப்பு நிறுவனமான தேல்ஸ், தங்கள் பராமரிப்பு, பழுது மற்றும் செயல்பாட்டு மையத்தை புதுடில்லியில் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.