ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் முதல்வர் பிரேன் சிங்

மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 63 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குகி, நாகா உள்ளிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மைதேயி சமூகத்தில் பெரும்பாலானோர் இந்து மதத்தையும், குகி, நாகா சமூகத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர்.

மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் மைதேயி சமூகத்தினரும் வனப்பகுதிகளில் குகி, நாகா சமூகத்தினரும் வசிக்கின்றனர். மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போதைய முதல்வர் பிரேன் சிங்கும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

மணிப்பூரில் ஆட்சி, அதிகாரத்தில் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வனப்பகுதி மீட்புப் பணி என்ற பெயரில் குகி, நாகா சமூகத்தினரின் வாழ்விடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சூழலில் குகி, நாகா சமூகத்தினரை போன்று தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் தங்களது உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படும் என்று குகி, நாகா சமூகத்தினர் கடந்த மே 3-ம் தேதி போராட்டம் தொடங்கினர். சுமார் 2 மாதங்கள் நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில் முதல்வர் பிரேன்சிங் நேற்று மாலை ஆளுநர் அனுசுயா உய்கியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து இம்பாலில் உள்ள முதல்வர் பிரேன் சிங் வீட்டின் முன்பு நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது முதல்வர் பிரேன் சிங்கின் ராஜினாமா கடிதத்தை மூத்த அமைச்சர்கள் மக்களிடம் காண்பித்தனர். அந்த கடிதத்தை பிடுங்கிய மக்கள் கிழித்தெறிந்தனர். ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் செல்வதை தடுக்கும் வகையில் மனித சங்கிலி அமைத்தனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் பிரேன் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த முக்கியமான நேரத்தில் எனது நிலையை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் வீட்டின் முன்பு திரண்டிருந்த பெண்கள் கூறும்போது, “முதல்வர் பிரேன் சிங் நல்லாட்சி நடத்துகிறார். அவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது. மாநிலத்தின் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.