ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரின் காஞ்சன் நகரில் முகம்மதி மதீனா மசூதி உள்ளது. இங்கு 15 மாணவர்கள் படிக்கும் மதரஸாவும் உள்ளது. இங்குள்ள முகம்மது மாஹிர் என்ற மவுலவி தங்கியிருந்தார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மசூதியின் பின்பக்க வாயில் வழியாக முகமூடி அணிந்த 3 பேர் உள்ளே புகுந்து மாஹிரை தடியால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பினர்.
இதுகுறித்து ராம்கஞ்ச் காவல் நிலைய அதிகாரி ரவீந்திர கின்ச்சி கூறும்போது, “மவுலவி முகம்மது மாஹிர் கொலையில் முகமூடி அணிந்திருந்த 3 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை” என்றார். மவுலவி முகம்மது மாஹிர் உ.பி.யின் ராம்பூரை சேர்ந்தவர். 7 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்துள்ளார். அவரது சகோதரர் முகம்மது அமீர் கூறும்போது, “மதரஸாவை மாஹிர் கையாளுவதை அப்பகுதியில் உள்ள சிலர் விரும்பவில்லை. அவர்கள் மதரஸாவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க விரும்பினர். கொலை தொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.