ராகுல் வேண்டுமானால் அணுகுண்டை பார்த்து பயப்படட்டும்: அமித் ஷா

 

‛‛ ராகுல் வேண்டுமானால் அணுகுண்டை பார்த்து பயப்படட்டும். நாங்கள் பயப்பட மாட்டோம்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
உ.பி., மாநிலம் பிரதாப்கார்க்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கு, அவர்களின் ஓட்டு வங்கியை நினைத்து பயப்படுகின்றனர். எதையும் நினைத்து பா.ஜ.,விற்கு பயமில்லை.
ராமர் கோயிலை கட்டியதுடன், காசி விஸ்வநாதர் காரிடரையும் மோடி கட்டமைத்துள்ளார். இதனை முகாலய பேரரசர் அவுரங்கசீப் அழித்தார். இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார்? தங்களின் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக பிரதமர் பதவி ஏற்பர் என அக்கூட்டணி தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

மணிசங்கர் அய்யரும், பரூக் அப்துல்லாவும், பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளதால் அந்நாட்டை மதிக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கேட்கக்கூடாது எனக்கூறி வருகின்றனர். அணுகுண்டை பார்த்து ராகுல் வேண்டுமானால் பயப்படட்டும். நாங்கள் பயப்பட மாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம். அதனை நாங்கள் மீட்டெடுப்போம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.