ரயில் பயணியர் ஒவ்வொருவருக்கும் 55 சதவீத கட்டண சலுகை ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020 மார்ச் மாதத்திற்கு பின், நாடு முழுதும் பயணியர் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக சிறப்பு ரயில்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.
இந்த நேரத்தில், ரயில்வேயின் வருவாய் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால், மூத்த குடிமக்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டண சலுகையை ரயில்வே நிர்வாகம் நிறுத்தியது.
கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்து, 2022, ஜூன் முதல் ரயில் சேவைகள் முழுமையாக சீரடைந்த பின், இந்த கட்டண சலுகை நிறுத்தம் திரும்பப் பெறப்படவில்லை. மீண்டும் கட்டண சலுகையை அமல்படுத்தக் கோரி, மத்திய அரசிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பார்லி.,யிலும் இதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத்தில் நடந்து வரும், ‘புல்லட்’ ரயில் திட்டப்பணிகளை பார்வையிட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வந்தார். அப்போது, ‘ரயில் கட்டண சலுகை எப்போது மீண்டும் அமலுக்கு வரும்’ என, செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளிக்கையில், ”ஒரு குறிப்பிட்ட இடத்துக்கான ரயில் கட்டணம் 100 ரூபாய் என்றால், பயணியிடம் இருந்து ரயில்வே நிர்வாகம் 45 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது. ஏற்கனவே 55 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.
முந்தைய கட்டண சலுகை திரும்ப அமலுக்கு வருமா, வராதா என்பது குறித்து நேரடியாக அவர் பதில் அளிக்கவில்லை. சலுகை ரத்து செய்யப்பட்டதன் வாயிலாக, கடந்த 2022 – 23ம் ஆண்டில், 15 கோடி மூத்த குடிமக்களிடம் இருந்து ரயில்வே நிர்வாகம் 2,242 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.