ராஜஸ்தானில் 2ம் நிலை ஆசிரியர் தேர்வுக்கான வினா தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பூபேந்திரா சரண் உள்பட 4 பேர் மீதும் ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவின்பேரில் அவர்கள் நால்வரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பூபேந்திர சரணின் வீடு சட்டவிரோதமான வகையில் அத்துமீறி கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில், அதனை ஜெய்ப்பூர் வளர்ச்சி கழகம் இடித்து தள்ளியுள்ளது. மாநில இளைஞர்களின் வருங்காலத்துடன் விளையாடும் தீய எண்ணம் கொண்ட நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை ராஜஸ்தான் அரசு தொடரும் என அரசு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கிவைத்த குற்றவாளிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ளும் நடவடிக்கையை பல மாநில அரசுகள் பின்பற்றிவரும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியும் அதனை கையில் எடுத்திருப்பதாக சமூக ஊடகங்களில் மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.