யோகா தரும் வர்த்தக வாய்ப்புகள்

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ‘மனித நேயத்திற்காக யோகா’ என்ற கருத்தின் அடிப்படையில் இந்த யோகா தினத்தைக் கொண்டாடவும், பிரபலப்படுத்துவோம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். கரீனா கபூர், பிபாஷா பாசு, ஷில்பா ஷெட்டி போன்ற பிரபல பாலிவுட் நடிகர் நடிகைகள், ஹாலிவுட்டில் ஜெனிஃபர் அனிஸ்டன், ஸ்டிங், மடோனா என பலரும் யோகா முறையாக செய்து வருகின்றனர். யோகா வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் அதிகளவில் பயனளிக்கிறது என கூறுகின்றனர். இப்படி உலக அளவில் பிரபலமாகி வரும் யோகா, உடல் நலம் மன நலம் மட்டுமன்றி யோகா பொருளாதாரத்திற்கும் உகந்த வாய்ப்பாகவும் மாறி வருகிறது.

தற்போது பாரதத்தில் யோகா மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை உருவாக்கி வருவதுடன் யோகா ஆசிரியர்களுக்கு நல்ல வருவாயை அளிக்கும் சேவையாகவும் மாறிவருகிறது. பாரதம் முழுவதும் பல பெரு நகரங்களில் மக்கள் தற்போது தங்களது மன அழுத்தத்தை நீக்கவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் யோகா மற்றும் தியானத்தை அதிகளவில் நாடி செல்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் பலர் யோகா கற்க பாரதம் நாடி வருகின்றனர். வெளிநாட்டினருக்கான டூர் பேக்கேஜ்களில் பாரதப் பாரம்பரிய அனுபவத்தை அளிக்கும் திட்டம் என்று அறிவிக்கப்படும் 90 சதவீத திட்டங்களில் யோகா மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளைக் கவரும் வகையில் பாரத கலாச்சார பாரம்பரிய அனுபவம் மட்டுமின்றி மருத்துவ காரணங்களுக்காகவும் யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ சுற்றுலா, விடுமுறை சுற்றுலா பேக்கேஜ்களும் பல நாடுகளில் தற்போது பிரபலமாகி வருகிறது. குறிப்பாக நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா நகரமான கோவாவில் யோகா மற்றும் யோகா சார்ந்த வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது.

உலகம் முழுவதிலும் இருந்து ஓய்வெடுக்கவும் அமைதியைக் காணவும் அதிகளவிலானோர் விரும்பும் இடம் கோவா. கோவா என்றால் பார்ட்டி, பீச், கொண்டாட்டம் என்பதைத் தாண்டி யோகா அங்கு மிகப்பெரிய ஆதிக்கத்தை உருவாக்கி வருகிறது. கோவாவில் தற்போது யோகா பயிற்சி மையங்கள் அதிக அளவில் உருவாகியுள்ளன. முக்கியமாக, கோவாவின் மோர்ஜிம், மாண்ட்ரெம் போன்ற பகுதிகளில் யோகா சேவை நிலையங்கள் அதிகமாகவே உள்ளன. இத்தகைய யோகா மையங்களின் எண்ணிக்கை இச்சேவைக்கான வளர்ந்து வரும் சந்தையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. இங்கு வெளிநாட்டு பயணிகளைக் கவரும் வகையில், தங்குமிடம், உணவு, சுற்றுலா என விடுமுறை திட்டங்களுக்கு ஏற்ப ஒரு நாளுக்கு ரூ. 5,000 முதல் 10,000 வரை பல பேக்கேஜ்கள் வழங்கப்படுகிறது. பெரிய புகழ்பெற்ற நிறுவனம், ஹோட்டல்கள் என்றால் ஒரு நாளுக்கு ரூ. 15,000 முதல் 20,000 ரூபாய் வரையிலான திட்டங்களும் வழங்கப்படுகிறது. உள்நாட்டு வெளிநாட்டு மக்கள் அதிக அளவில் யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்டுவம் என நமது பாரம்பரியங்களை நாடி செல்வது அதிகமாகி வருவதால், யோகா கோவாவை தாண்டி பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும் பிரபலமாகி பெரும் வர்த்தக வாய்ப்பையும் உருவாக்கி வருகிறது.