சுவாமி விவேகானந்தரை மிக உயர்ந்த தியான நிலைக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் எடுத்துச் சென்றார். அத்தகைய பேரின்பத்தை அவருக்கு அளித்த பின்னர் மீண்டும் அவரை சாதாரண நிலைக்கு கொண்டு வந்தார்.
அப்பொழுது பரமஹம்ஸர் விவேகானந்தரைப் பார்த்து ”உனக்கு என்ன வேண்டும்,” என்று கேட்டார். ”சற்று நேரத்திற்கு முன்பு நான் இருந்த பரவச நிலையிலேயே என்னை எப்போதும் இருக்கச் செய்து விடுங்கள்” என்று விவேகானந்தர் பதில் கூறினார்.
”உன்னிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. இலை ஒன்று நீர்மேல் மிதந்து செல்லும். ஆனால் சிறு குருவி அதன் மீது அமர்ந்தாலும் அது நீருக்குள் முழுகிப் போய்விடும். கப்பல் ஒன்று ஏராளமான சாமான்களை ஏற்றிக்கொண்டு மிதந்து செல்லும். இலை போன்று நீ மட்டும் அப்பேரின்பத்தில் இருந்தால் போதாது. பல்லாயிரக் கணக்கான மக்களை பல துன்பக் கடலிலிருந்தும் கரையேற்றும் பொறுப்பு உன்னுடையது” என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஞானிகள் தாங்கள் பந்த பாசத்தினின்றும் விடுபடுவது போல பிறரையும் விடுவிக்க விரும்புகின்றனர் என்பதற்கு சிறந்த சான்று இது.