‘ஹிந்து கோவில்களை மட்டும் குறி வைத்து சீரழிக்கும் தமிழக அரசும், வனத்துறையும், ‘யானை வழித்தட வரைவு அறிக்கை’ என்ற பெயரில் பக்தர்களை வஞ்சிக்கிறது’ என, ஹிந்து முன்னணி குற்றஞ்சாட்டி உள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தமிழகத்தில், 42 யானை வழித்தடங்களை கண்டறிந்ததாக ஒரு வரைவு அறிக்கையை வனத்துறை வெளியிட்டுள்ளது. அதில் நீலகிரி, கோவை, ஆனைமலை, அகஸ்திய மலை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய ஐந்து யானைகள் காப்பகம் உள்ளிட்ட, 20 வனக்கோட்டங்களில், 2023ம் ஆண்டு அறிக்கையின்படி யானைகளின் எண்ணிக்கை குறைவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
‘யானை வழித்தடங்களை மறைக்கின்றனர்’ என்ற பெயரில் பல கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டுத்த சதி நடப்பதாக அறிகிறோம். உதாரணமாக, நெல்லை மாவட்டம், அகஸ்தியர் அருவி செல்லும் வழியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
அதுபோல, கோவை மாவட்டத்தில், வீரகாளியம்மன் கோவில், கொடிவேலி அம்மன், பத்ரகாளி அம்மன், பூண்டி வெள்ளிங்கிரி போன்ற கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், அதே பகுதியில் அமைந்துள்ள காருண்யா நிறுவனம் உள்ள பகுதியில் யானை வழித்தடங்கள் காலங்காலமாக உள்ளன.
அதை வனத்துறையும், தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை. மாறாக, முறையாக ஆன்மிகப் பணியாற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு சேவைப் பணியில் ஈடுபட்டு வரும், ஈஷா மையத்தின் மீது பல குறைகளை தொடர்ந்து சொல்லி வருகிறது.
தவிர, உலகப்புகழ் பெற்ற மருதமலை கோவிலில் யானை வழித்தடம் என்ற பெயரில் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். இதில் உள்ள சதியின் பின்னணியை ஹிந்துக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ‘சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம்’ என கிறிஸ்துவ மதத்தினர் பகிரங்கமாக பேசிய போது, தி.மு.க., அரசு வாய் திறக்கவில்லை. அடுத்த குறியாக, ஏழாம் படை வீடாக கொண்டாடும் மருதமலையை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது தி.மு.க., அரசு. கல்கொத்தி – வாளையாறு யானை வழித்தடத்தில் அமைந்துள்ள காருண்யா நிறுவனத்தால், யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன.
மொத்தம், 1,200 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள காருண்யா நிறுவனம் யானை வழித்தடத்திற்குள் வராது… ஆனால், பல நுாறு ஆண்டுகளாக லட்சக்கணக்கான ஹிந்துக்கள் வழிபடும் கோவில்கள் மட்டும் யானை வழித்தடத்தில் வரும் என்பது எந்த வகையில் நியாயம்? தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம்; கிறிஸ்துவர்களுக்கு வேறு சட்டமா? யானைகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், ஹிந்துக்களின் உரிமைகளை பறிக்கும் புதிய யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.