திருப்பூர் ஜவுளி ஆலையில் பணிபுரிந்து வரும் காஷ்மீர் பெண் பர்வீன் பாத்திமா குறித்து, பிரதமர் மோடி ‘மான் கீ பாத்’ உரையில் புகழ்ந்தார்.
பிரதமர் மோடி, நேற்று முன்தினம்(டிச.,29), இந்த ஆண்டின்(2019) இறுதி ‘மான் கீ பாத்’ உரையை நிகழ்த்தினார். அவரது உரையில், ”காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களுக்கு ‘ஹிமாயத்’ என்ற திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில், 18 ஆயிரம் பேருக்கு, 77 தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 5 ஆயிரம் பேர் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், பர்வீன் பாத்திமா என்ற பெண், தமிழகத்தில், திருப்பூரில் உள்ள ஜவுளி ஆலையில் மேற்பாவையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.” என்று பேசினார்.
திருப்பூரில் பணி
மோடி பெருமையுடன் குறிப்பிட்ட பர்வீன் பாத்திமா, 24, திருப்பூர், – நொச்சிபாளையம் பிரிவில் உள்ள, ‘எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ்’ என்ற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில், பணிபுரிகிறார்.
பர்வீன் பாத்திமா, நமது நிருபரிடம் கூறியதாவது: காஷ்மீரில், கார்கிலில் வசிக்கிறோம். தந்தை, சபீர் உசேன்; தாய் பத்துல். தந்தை, கல்லூரியில் கிளார்க்காக பணிபுரிகிறார். இரண்டு தங்கைகள்; ஒரு தம்பி உள்ளனர். குடும்ப சூழல்களால், பிளஸ் 2 தான் படித்தேன்.
லே- லடாக் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில், மூன்று மாதம், ஆடை உற்பத்தி நுட்பங்களைக் கற்றேன். பயிற்சியின்போதே, திருப்பூரில் பணிபுரிய வேண்டிவரும் என்றனர். குடும்பத்தை மேம்படுத்த அதற்கு உடன்பட்டேன். திருப்பூர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஓவர்லாக் டெய்லராக பணியில் இணைந்தேன். என்னைப்போன்று பயிற்சி பெற்ற, ஜம்மு, காஷ்மீர், லடாக்கை சேர்ந்த, 90 பெண்கள், பணிபுரிந்துவருகின்றனர்.
எங்களுக்கு அனைத்து வசதிகளும் திருப்பூரில் கிடைக்கிறது. தினம் மூன்று வேளை தொழுகை நடத்தவும் பிரத்யேக ஏற்பாடு செய்து தந்துள்ளனர். எங்கள் பகுதி சமையலர்களையே பணி அமர்த்தி, நாங்கள் விரும்பி உட்கொள்ளும் உணவு பதார்த்தங்களை வழங்குகின்றனர்.சிறப்பாக பணிபுரிவதால், பணியில் சேர்ந்த இரு மாதங்களிலேயே என்னை மேற்பார்வையாளராக பதவி உயர்வு செய்தனர். எங்கள் வாழ்வில், திருப்பூர் நல்ல திருப்பத்தை கொடுத்துள்ளது. தமிழ் கொஞ்சம், கொஞ்சமாக கற்று வருகிறேன். காஷ்மீரை வளர்ச்சிபெறச் செய்யும் பிரதமரின் கனவை நனவாக்கி காட்டுவேன். இவ்வாறு, பர்வீன் பாத்திமா கூறினார்.
பயந்து வாழ வேண்டியதில்லை…
காஷ்மீரில் தினம் தினம் பயத்துடனேயே வாழவேண்டியிருந்தது. ஜம்மு, காஷ்மீர், லடாக் பிரிக்கப்பட்டுள்ளது; சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இனி, காஷ்மீரில் அமைதி நிலவும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. காஷ்மீர் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளனர்; சேமிப்பு என்பதே இல்லை.திருப்பூர், எங்களுக்கு பிடித்தமான நகராகி விட்டது. காஷ்மீர் பெண்களுக்கு திருப்பூர் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுப்பேன். என பாத்திமா பர்வீன் கூறினார்.
போனில் பேசிய பிரதமர்
பர்வீன் பாத்திமா கூறியதாவது: சமீபத்தில், லடாக்கில் நான் பயிற்சி பெற்ற மையத்தில்,திருப்பூர் ஆடை உற்பத்தி துறையின் தனிச் சிறப்புகள்; இங்கு பணிபுரிவதால் எங்கள் குடும்ப பொருளாதாரம் மேம்பட்டுவருவது குறித்து, உரையாற்றினேன். இதை அறிந்து, பிரதமர் மோடி, என்னை திடீரென தொலைபேசியில் அழைத்தார்.
‘பர்வீன் பாத்திமா…’ என்று எனது பெயரை கூறியபோது, ‘ஆம்… நீங்கள் யார்?’ என்றேன். ‘நான் பிரதமர் மோடி பேசுகிறேன்,’ என்றார். ‘என்னுடன் பிரதமர் பேசுகிறாரா?’ என, ஒருகணம்ஆச்சர்யத்தில் மெய் சிலிர்த்துப்போனேன். ‘திருப்பூர் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் டெய்லராக பணியில் சேர்ந்து, மேற்பார்வையாளராக நீங்கள் பதவி உயர்வு பெற்றதை அறிந்தேன்; உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த பயிற்சி திட்டத்தில் உங்களைப்போன்று, காஷ்மீரைச்சேர்ந்த அனைவரையும் பயன்பெறச் செய்யுங்கள். இதற்கு தேவையான உதவிகளை அரசு செய்து தரும்,’ என, தெரிவித்தார். ‘நிச்சயமாக நீங்கள் கூறியபடி, என்னைப்போல் எல்லோர் வாழ்வும் வளம்பெற வழிகாட்டுவேன்,’ என பிரதமரிடம் உறுதி அளித்தேன். சாதாரண பெண்ணான என்னுடன் நாட்டின் பிரதமர் பேசியதை வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வரமாக நினைக்கிறேன். நாட்டை வல்லரசாகமாற்றிக்காட்டும் சக்தி, அவரிடம் இருப்பதை என்னால் முழுமையாக உணர முடிந்தது.