மோடி ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: ஜே.பி.நட்டா பிரச்சாரம்

சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து அரியலூரை அடுத்த கோவிந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியது: பொருளாதாரத்தில் 13-வது இடத்திலிருந்த இந்தியா மோடி ஆட்சிக்கு வந்த பின் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சீன செல்போன்களை நாம் வாங்கிய காலம் மாறி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தற்போது இந்தியாவிலேயே 90 சதவீத செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆட்டோமொபைல் உற்பத்தியில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கோலோச்சி வந்த நிலையில், உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மீண்டும் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் இந்தியா மேலும் பல்வேறு வளர்ச்சிகளை அடையும்.
பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 55 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர். 80 கோடி மக்களுக்கு ரேஷனில் இலவசமாக அரிசி, கோதுமையை மத்திய அரசு வழங்கி வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பிரதமர் மோடி, ஊழல் இல்லாத ஆட்சி செய்து வருகிறார். ஆனால் இண்டியா கூட்டணியில் உள்ள அனைவரும் ஊழல்வாதிகள். தற்போது அவர்கள் பெயிலில் உள்ளனர் அல்லது ஜெயிலில் உள்ளனர். குடும்ப ஆட்சி நடத்துபவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர். எனவே, ஊழலை ஒழிக்க பிரதமர் மோடியை 3-வது முறையாக பிரதமராக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, கரூரில் பாஜக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து ஜே.பி.நட்டா பேசியது: தமிழகத்துக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் 3 முதல் 4 மடங்கு வரை அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் என்றார். தொடர்ந்து நேற்று இரவு திருச்சியில் நடைபெற்ற ‘ரோடு ஷோ’வில் நட்டா கலந்து கொண்டார்.