மோடியின் வேலை வேட்டை வியூகம் கொட்டிக் கிடக்குது வாய்ப்பு!

இளைஞனே, அரசு தயார், நீ ..?

மோதிஜியின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி  பத்தாண்டுகள் நிறைவு செய்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்று முதல் நிதி அறிக்கையையும் சமர்ப்பித்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் நாம், விலைவாசி உயர்வைக்  கட்டுப்பாட்டில்  வைப்பது, வரி வசூலைப் பெருக்குவது, வங்கிகளின் வாராக் கடன்களைக் குறைப்பது,  தேசத்தின் உற்பத்தியைப் பெருக்குவது, என்று நிதி மேலாண்மை விஷயத்தில் கோவிட் போன்ற தாக்குதலுகளுக்கு   இடையேயும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம்.•

ஆனால், வேலை வாய்ப்பு விஷயத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறிக் கொண்டு வருகின்றன. அதனை முற்றிலும் புறம் தள்ளி விட முடியாது தான்.  ரொபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தின் பெருக்கம் உள்ளிட்ட  பல்வேறு காரணங்களால் வளர்ச்சியின் விகிதம் கூடினாலும் வேலைகளை உருவாக்க முடியாத  ஒரு சூழ்நிலை உலகெங்கும் காணப்படுகிறது.

இந்த விவகாரத்தில், மோடி 2.0யிலேயே அதாவது  2022 முதலே வேலைவாய்ப்பை மேம்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றுள் ஒன்று தான் ஜூன் 14, 2022 அன்று அங்கீகரிக்கப்பட்டு, செப்டம்பர் 2022ல் செயல்படுத்தப்பட்ட அக்னிபத் திட்டம்.

அக்னிவீரர்கள் தேர்வானவுடன்  ஆறு மாதங்களுக்குப் பயிற்சி பெறுவார்கள். பின்னர் மூன்றரை  ஆண்டுகள் முப்படைகளின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றுவார்கள். அப்படி ஒரு பாட்ச்சில் தேர்வானவர்களில் 25 சதவிகிதத்தினர் நிரந்தரமாக ராணுவத்தில் சேருவார்கள். அப்படி வேலை பெறாத மற்றவர்கள் ஒன்றும் சோடை போய் விடமாட்டார்கள். ராணுவத்தில் கற்ற பணி ஒழுக்கமும் பெற்ற தலைமைப் பண்புகளும் வேலைச் சந்தையில் அவர்களை முந்தி இருக்கச் செய்யும்.

இந்த வேகம் போதாது என்றுணர்ந்த மத்திய அரசு, 2024-–25 பட்ஜெட்டில் இளைஞர்களின்  வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும்  திறன் மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளித்துள்ளது. குறைந்தது நான்கு கோடியே பத்து லட்சம் இளைஞர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைகள், திறனை மேம்படுத்துதல், பெண்கள் அதிக அளவில் நாட்டின் தொழில்- வணிக துறைகளில் பங்கேற்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு ஆகியவற்றுடன்  மூலதன உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் என்பன இந்த முன்னெடுப்புகளின் மையக்கரு.

வேலைவாய்ப்பின்மை பற்றிப் பேசும்போதெல்லாம் நிறுவனங்களின் தரப்பில் இருந்து பொதுவாக ஒரு விமரிசனம் வைக்கப் படும். ” வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், தகுதிப் பற்றாக்குறை  அதிகமாக உள்ளது” என்பார்கள். அதற்காகத்தான், ரூ.5000 ஊக்கத்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்கள் , அதுவும், 500 முன்னணி நிறுவனங்களில். கரும்பு தின்னக் கூலியும் உண்டு இளைஞர்களே!