மேற்கத்திய ஊடகங்கள் தங்களுக்கு அடிபணிந்து செல்லாத தலைவர்களையும், நாடுகளையும் தாழ்த்த வேண்டும், வீழ்த்த வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கும் செல்லும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அதானி குழுமம் தொடர்பான விமர்சனத்தை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிப்படுத்தியது. இதற்கு பின்னணியில் இருந்தவர் ஜார்ஜ் சொரோஸ். இந்த அறிக்கை வெளியான பிறகு மோடி அரசு பலவீனம் அடைந்து விடும். நான் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவன் கிடையாது என்ற போதிலும் இந்தியாவில் ஜனநாயகம் புத்தெழுச்சி பெறும் என்பதாக ஜார்ஜ் சொரோஸ் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் உள்நோக்கம் மோடியை வீழ்த்த வேண்டும் என்பதே. இதற்கு அதானியை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மேற்கத்திய ஊடகங்கள் பாரதத்தில் ஜனநாயகம் செம்மையான முறையில் இல்லை. சிறுபான்மையினருக்கு கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்றெல்லாம் வரைமுறையின்றி உண்மைக்குப் புறம்பான செய்திகளையெல்லாம் வெளியிடுவதே இதன் அன்றாட நடவடிக்கையாகும்.
பாஜக பாசிஸ்ட் சிந்தனை கொண்டது. இதற்குப் பின்புலமாக உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இதே கருத்தோட்டம் கொண்டதுதான் என்றெல்லாம் இந்த மேற்கத்திய ஊடகங்கள் பொய்யைப் பரப்ப தவறியதே இல்லை.
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். ரணாகத் கன்னியாஸ்திரி கற்பழிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி அரசு கிறிஸ்தவர்களுக்கு எதிரானது. கன்னியாஸ்திரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. காவி நபர்கள் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றெல்லாம் இந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் உண்மையில் அந்த கன்னியாஸ்திரியை பங்களாதேஷைச் சேர்ந்த திருடர்கள் கற்பழித்துள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்தவுடன் இந்த மேற்கத்திய ஊடகங்கள் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதை கைவிட்டு விட்டு வேறு ஒரு கதைக்கு இந்த ஊடகங்கள் தாவி விட்டன.
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் குருகான்வானி என்ற நபர் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்த முடியாமல் நெருக்குதலுக்கு ஆளாக்கப் பட்டார். ஜனநாயகப் படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. உண்மையில் குருகான்வானி பயங்கரவாதி மட்டுமல்ல, தேசத்துரோகியும் கூட. அண்டை நாட்டுக்காக குரல் கொடுப்பதுதான் குருகான்வானியின் பிழைப்பு. இப்படிப்பட்ட நபர்களைத்தான் மேற்கத்திய ஊடகங்கள் உச்சியில் தூக்கி வைத்துக் கொள்கின்றனர்.
மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற 10 ஆண்டு ஆட்சியில் ராணுவத்துக்கு நவீன தளவாடங்கள் வாங்கப்படவில்லை. இதனால் நமது ராணுவம் பலவீனமான நிலையில் இருந்தது. ராணுவத்தை நவீனப்படுத்த மோடி அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தது. ரபேல் போர் விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ஊழல் நடைபெற்றுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியது. இதற்குப் பின்னால் மேற்கத்திய ஊடக சின்டிகேட் பதுங்கியிருந்தது. இவ்விவகாரம் உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டது. இதில் ஊழல் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வழிவகை செய்த 370வது அரசியல் சாசனப் பிரிவை மோடி அரசு ரத்து செய்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து அங்குள்ள சிறுபான்மையினர் கடும் பாதிப்புக்கு ஆளான சூழ்நிலையில் பாரதத்தை நாடி வந்தார்கள். அவர்களுக்கு குடியுரிமை அளிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இது முஸ்லிம்களுக்குப் பாதகமானது என பொய் பிரச்சாரம் செய்தார்கள். 2020ல் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் நம் நாட்டுக்கு வந்தார். இந்த காலகட்டத்தில் போராட்டம் நடத்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் பிரச்சினையை உக்கிரப்படுத்துவதற்காக இவ்வாறெல்லாம் செய்தார்கள்.
முத்தலாக் முறைக்கு மோடி அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன்மூலம் முஸ்லிம் பெண்கள் நிம்மதியாக வாழ வழி ஏற்பட்டுள்ளது. முத்தலாக் முறை இஸ்லாமிய கோட்பாட்டுக்கே எதிரானது.
வெளிநாடுகளிலிருந்து இங்குள்ள தன்னார்வ அமைப்பு களுக்கு வரைமுறையின்றி நிதி வந்து கொண்டிருந்தது. இந்த நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. ரத்தக்களரியை ஏற்படுத்த இந்தத் தொகை செலவிடப்பட்டது. இதையெல்லாம் கட்டுப்படுத்துவதற்காக எப்சிஆர்ஏ எனப்படும் வெளிநாட்டு நன்கொடை கட்டுப்பாட்டுச் சட்டம் இறுக்கமாக அமலாக்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக மோடி அரசை பலவீனப்படுத்தவும் வெளிநாட்டு ஊடகங்கள் முயற்சி செய்தன. ஆனால் அவற்றையெல்லாம் மோடி அரசு தகர்த்தெறிந்தது. பாரதத்துக்கும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் மோடி அரசு மருந்துகளை சப்ளை செய்தது. பசி, பட்டினியால் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
எல்லா விதமான அஸ்திரங்களையும் பிரயோகித்த பிறகும் இவற்றையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு மோடி அரசு நிமிர்ந்து நிற்கிறது. இதை மேற்கத்திய ஊடகங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே எதிர்காலத்திலும் இத்தகைய விஷமத்தனமான விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கும்.
கட்டுரையாளர்: ஆய்வாளர், பாதுகாப்பு விவகாரம்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி