தமிழ், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் மொழியாக்கம் செய்துவரும் அலமேலு கிருஷ்ணன் விஜயபாரதம் வாசகர்களுக்கு அறிமுகமானவர். அவருக்கு அண்மையில் கிடைத்த ஒரு கௌரவத்தை அடுத்து அவரை பேட்டி கண்டார் எழுத்தாளர் பத்மாவதி.
உங்கள் குடும்பப் பின்னணி-பற்றி கூறுங்களேன்?
எனது அப்பா திரு. ஹரிஹர அய்யரின் ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி கிராமம். அவர் கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு இடம்பெயர்ந்தார். அவர் அங்கு மளிகைக் கடைவைத்திருந்தார். எனது அம்மா திருமதி சிவகாமி அம்மாள் வைக்கத்தைச் சேந்தவர். எனது மூத்த சகோதரர்கள் மூன்றுபேரும் நானும் கேரளாவில் பிறந்துவளர்ந்தோம்.
எனது அம்மாவிற்கு இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அருணாசலக் கவிராயரின் ராம நாடகத்தை மனப்பாடமாக ராகத்துடன் பாடுவார். பத்திரிகைகளில் வரும் படைப்புக்களைப் படித்து அவை குறித்து வீட்டிலுள்ள அனைவரும் சர்ச்சைகளில் ஈடுபடுவர்.
எனது சகோதரர்கள் நிராலா ஹிந்தி காலேஜ் என்ற கல்வி நிறுவனத்தை வீட்டிலேயே நடத்தி வந்தனர். அங்கு ஹிந்தியும் ஸம்ஸ்க்ருதமும் கற்றுக் கொடுக்கப்பட்டன. அதனால் நானும் சிறுவயதிலேயே அவற்றைக் கற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி ஒன்பதாம் வகுப்பு படிக்கும்பொழுதே ஹிந்தி வகுப்பு எடுக்குமளவிற்குத் தேர்ச்சிபெற்றுவிட்டேன். வடமாநிலத்தைங்களின் பல கல்வியாளர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். அவர்களுடன் சரளமாக ஹிந்தியில் உரையாடும் வாய்ப்பும் கிட்டியிருந்தது .
பள்ளியில் மலையாளமே பயிற்றுமொழியாக இருந்தது. பள்ளியிலும் கல்லூரியிலும் ஸம்ஸ்கருத மொழியை முக்கியப் பாடமாகக் கற்றுக் கொண்டேன் . எனது மூன்று சகோதரர்களும் உயர்கல்வி பெற்று கல்வித்துறையில் ஹிந்திப் பிரிவில் உயர்பதவிகளில் பணியாற்றியுள்ளனர்.
மொத்தத்தில் வீட்டின் சூழல் மொழி கற்கும் ஆர்வத்தையும் இலக்கியத்தில் ஈடுபாட்டையும் என்னுள் வளர்த்தது.
உங்கள் கல்வித் தகுதி, நீங்கள் ஆற்றிய பணி இவை குறித்துக் கூறுங்களேன்?
ஹிந்தி, ஸம்ஸ்க்ருதம், கல்வியிய மூன்றிலும் முதுகலைப்பட்டம் பெற்று சென்னையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹிந்தி, ஸம்ஸ்க்ருத மொழித்துறைத் தலைவியாகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றுள்ளேன்.
நீங்கள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து வருகிறீர்கள் என்றறிந்தேன். உங்களுக்கு இத்துறையில் எப்படி ஆர்வம் பிறந்தது?
இங்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனது தாய்வழித் தாத்தா பரமேஸ்வர சர்மா அக்காலத்திலேயே ஷேக்ஸ்பியரின் மேக்பத், கிங் லியர் ஆகிய நாடகங்களை ஆங்கிலத்திலிருந்து மலையாள மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார் என்றும் அதில் ஒரு நாடகம் பள்ளியில் துணைப்பாடநூலாக இடம் பெற்றிருந்தது என்றும் எனது மூத்த சகோதரர் சொல்லக் கேட்டுள்ளேன். அது அவர் வழித்தோன்றலாகிய எங்கள் நால்வருக்கும் மொழியாக்கத்துறையில் ஆர்வமுண்டாவதற்கான ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மொழியாக்கத்தில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட பெரிய அண்ணா என் மொழிபெயர்ப்பு குருவாக இருந்து அதன் நுணுக்கங்களை கற்றுத் தந்தார். இன்றளவும் அவரிடம் கற்கும் பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
மொழியாக்கத்திற்கான நூலினை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?
சில எழுத்தாளர்கள் தமது நூல்களை மொழியாக்கம் செய்யுமாறு வேண்டிக்கொள்வார்கள். புத்தக வெளியீட்டாளர்கள் வாயிலாகவும் சில புத்தகங்கள் வருவதுண்டு. நண்பர்கள்கூட சில நூல்களைப்பற்றி சொல்வதுண்டு. சில நூல்களைப் படிக்கும்போதே, அடடா இதைக் கண்டிப்பாக மொழியாக்கம் செய்யவேண்டும் என்ற ஆவல் என்னுள் எழும். மொழியாக்கத்திற்கான நூலை நாமே தேர்வு செய்யும்போது அதன் வெளிப்பாடு அற்புதமாகவே இருக்கும். உதாரணமாக சுகி. சிவம் அவர்களின் ‘வெற்றி நிச்சயம்’ நூல்.
அதன்பிறகு உங்களது மொழியாக்கப்பயணம் எவ்வாறு தொடர்கிறது?
ஹிமாம்சு ஜோஷி எழுதிய ‘யாதனா சிபிர் மேம்’ எனும் ஹிந்தி நூலினை எனக்களித்து தமிழில் மொழியாக்கம் செய்யுமாறு எனது மூத்த சகோதரர் பணித்தார். அதைச் ‘சித்திரவதை முகாமில்’ எனும் தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்தேன். அது விஜயபாரதத்தில் தொடராக வெளிவந்தது. பின்னர் புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டது.
ஹிமாம்சு ஜோஷியின் மற்றொரு நூலான ‘ககார் கீ ஆக்’ எனும் நாவலை ‘குன்றிலிட்ட தீ’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்தேன். மலைவாழ் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் சித்திரவதைகளையும் அடையாளம் காட்டிய இந்த மொழியாக்க நூல் ‘நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதை’ப் பெற்றுத்தந்தது.
இதைத் தவிர ‘பூர்ணாங்க் கீ ஓர்’, மஹீப்சிங்கின் குருகோவிந்த்சிங், தினகர் ஜோஷியின் ஹிந்த் ஸ்வராஜ் போன்ற புத்தகங்களை ஹிந்தியிலிருந்து தமிழிலும், சாணக்ய நீதி, பத்ம சாஸ்திரியின் ‘ஸம்ஸ்கருத கதா சதகம்’ இவற்றை ஸம்ஸ்க்ருததத்திலிருந்து தமிழிலும், Health Tips for Healthy Living – Useful Ideas என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியிலும், ரங்கஹரி எழுதிய ‘கோவாவில் மதமாற்றம்’ என்ற நூலை மலையாளத்திலிருந்து தமிழிலும் மொழியாக்கம் செய்துள்ளேன்.
மூலப்படைப்பிற்கும் மொழியாக்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
மூலநூலைப் படைப்பது ஒருசெயல் என்றால் மொழியாக்கம் செய்வது மேம்பட்ட செயலாகும். மூலநூலைப் படைப்பவருக்கு அவரது மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதுடன் படைப்புப் பணி முடிவடைந்துவிடுகிறது. ஆனால் மொழியாக்கப் படைப்பாளர் மொழியாக்கம் செய்யும்பொழுது அவரது மனம், அறிவு, செயல் அனைத்துமே ஒரு வரையறைக்குட்பட்டிருக்கும். அதனால் மொழியாக்கப் படைப்பாளர்களுக்கு சிந்திக்கும் திறனுடைய வாசகரின் மனதில் புகுந்து அவர்களை மகிழ்ச்சியூட்டுவதற்கு பல படிநிலைகள் தேவை. விஷயம் எதுவாக இருந்தாலும் படைப்பாளரின் ஆன்மாவுடன் ஒன்றுபட்டால் மட்டுமே சரியான, அழகான சொற்களும், உண்மையான பொருளும் வெளிப்பட்டு தானாகவே நல்லதொரு மொழியாக்கத்தை இலக்குமொழியில் அமைத்துக்கொடுக்கும்.
மொழியாக்கத்தில் தாங்கள் கையாளும் உத்திகள் என்ன?
மூலமொழியிலிருந்து இலக்குமொழிக்கு மொழியாக்கம் செய்வது ஒரு கடினமான பணி. இதற்கு மிகுந்த பொறுமையும் உழைப்பும் தேவை. மொழியாக்கம் செயவதற்குமுன் மூலநூலை பலதடவைகள் முழு ஈடுபாட்டுடன் படித்து உள்வாங்கிக் கொண்டபிறகு இயன்ற அளவு மூலத்தின் ஸாரத்தைக் காப்பாற்றி மூலமொழியிலிருந்து இலக்குமொழிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். மனதில் எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள நூலின் மூல ஆசிரியரை தொடர்புகொள்வேன். மொழியாக்கம் செய்ததில் சொற்பிழை, எழுத்துப்பிழை, கருத்துப்பிழை ஏதேனுமிருக்குமாயின் அவற்றை திருத்தம் செய்வேன். மூலநூலைப் படிக்கும் ஆனந்தம் கிட்டும் வரை திரும்பத் திரும்பப் படித்து திருத்தங்கள் கொண்டுவருவேன். அதன்பிறகு இருமொழியும் நன்கறிந்த ஒரு வாசகரிடம் கொடுத்து படித்துப் பார்க்கச் செய்வேன். அவரது கருத்துக்களின் அடிப்படையில் ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தால் அதையும் செய்வேன்.
மொழியாக்கப் படைப்பாளராய் உங்கள் மனதைத் தொட்ட நூல் எது?
மலையாளத்தில் ரங்கஹரி எழுதிய ‘கோவாவில் மதமாற்றம்’, ஹிமாம்சு ஜோஷியின் ‘யாதனாசிபிர் மேம்’, மஹீப்சிங்கின் குரு கோவிந்த் சிங்‘ ஆகிய இம்மூன்றுமே என் மனதை உருக்கியவை. கடந்த காலத்தில் நம் நாட்டிற்கிழைக்கப்பட்ட கொடுமைகளும் மக்கள் அனுபவித்த துயரங்களும் இந்நூல்களில் கண்ணீரால் எழுதப்பட்டுள்ளன.
உங்கள் படைப்புகள்?
தமிழ் மொழியில் “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”, “கல்வியா செல்வமா” என்ற சிறார்களுக்கான இரு சிறுகதைத் தொகுப்புக்கள்.
ஹிந்தி மொழியில் மழலையர் பாடல்கள்.
தமிழை எளிதாகப் பேசப் பயன்படும்வகையில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வாயிலாக ‘வாங்க தமிழ் பேசலாம்’ எனும் நூல்’
ஹிந்தி மொழியின் அடிப்படை இலக்கணமும் பொதுக்கட்டுரைகளும் அடங்கிய “ரசனா கௌமுதி’.
வாசகர்களை மொழிகடந்தும் இணைக்கும் பாலமான மொழியாக்கத்திற்கு அவர்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது?
இதற்கான பதிலை சற்று வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் ஆர்வத்துடன் மொழியாக்கம் செய்யும் நூல்கள் எந்த வாசகரை போய்ச் சேர்கின்றன, அவர்களின் கருத்து என்ன என்பதை நாங்கள் அறிந்துகொள்ள முடிவதில்லை. எனவே வெளியீட்டாளர்கள் வாசகர்களிடமிருந்து பின்னூட்டம் பெற்று எங்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டிக் கொள்கிறேன்.
புதிதாக இத்துறைக்கு வர விரும்புபவர்களுக்கு தாங்கள் கூற விழைவது என்ன?
மீட்டுருவாக்கம் என்றழைக்கப்படும் இது ஒரு அற்புதமான கலை. அரிதான சேவையுங்கூட. மொழி மீதான ஆர்வம் இருந்தால் இத்துறையில் நுழைந்துவிடலாம். முதலில் மொழிப் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்த வாசிப்பாளனாக இருந்து அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்; சொற் களஞ்சியத்தை வளப்படுத்திக்கொள்ளவேண்டும். மூலநூலிலுள்ள சொற்களுக்கு மிகச் சரியான பொருளைத் தேர்ந்தேடுத்துப் பயன்படுத்துவதற்கு அது உதவிகரமாக இருக்கும். நன்கு பேசிப்பழகி மொழியின் நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும். பின்பு சின்னச்சின்ன வாக்கியங்களையும் துணுக்குகளையும் மொழிபெயர்த்துப் பழகவேண்டும். இரு மொழிகளையும் நன்கறிந்த நண்பர்கள், உறவினர்களிடம் அளித்து உண்மையான மதிப்பீட்டைப் பெறவேண்டும். விமர்சனங்களை திறந்த மனத்துடன் ஏற்றுத் திருத்திக்கொள்ள வேண்டும். சிறப்புப் பயிற்சி அளித்துவரும் ஹிந்தி பிரச்சார ஸபா, பாரதீய அனுவாத் பரிஷத் போன்ற அமைப்புக்களில் சேர்ந்து மொழியாக்கத் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
மொழியாக்கம் செய்யும்பொழுது உங்களுக்கு எந்த நூலாவது சவாலாக இருந்ததா?
மூலநூலிலுள்ள வட்டார வழக்குச் சொற்கள் மற்றும் பழமொழிகளுக்கு ஈடானவற்றை இலக்குமொழிக்குக் கொண்டுசெல்லும்போது சில சவால்கலை எதிர்கொள்ளவேண்டிவரும். முனைவர் மஹீப்சிங்கின் குருகோவிந்தசிங் நூலை மொழியாக்கம் செய்யும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதில் சீக்கிய சமூகத்தினரின் மதம் தொடர்பான சொற்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. குரு கோவிந்த்சிங் இயற்றிய கவிதைகள் வ்ரஜபாஷையில் இருந்தது. தத்துவம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான விஷயங்களுக்கும் குறைவிருக்கவில்லை. ஆகையால் இதைத் தமிழ் பேசும் சாதாரண வாசகனுக்குப் புரியுமளவிற்கு எளிமையாக மொழியாக்கம் செய்வது சவாலாக இருந்தது. பல வலைத்தளங்களிலிருந்தும் அருகிலுள்ள குருத்வாரா நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டும் தகவல்கள் பெற்றுத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.
இப்படி ஒரு மொழியாக்க வழி உண்டு!
பாரதம் மொழிகள் நிறைந்த தேசம். ஏதேனும் இரு பாரத மொழிகளில், மூல மொழியிலிருந்து இலக்கு மொழிக்கு ஆங்கிலத்தைப் பாலமாக பயன்படுத்தாமல் மொழியாக்கம் செய்வது direct translation எனப்படும் நேர்வழி மொழியாக்கம். இந்த மிக அரிய வகை மொழியாக்க முறை பாரதத்தின் சூழலில் இன்று மிக மிக அவசியம். நேர்வழி மொழியாக்கத்திற்கு ஒரு உதாரணம் இது: மராட்டி மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு ஒரு கட்டுரையை மொழிபெயர்க்க, மராட்டி லிபி தெரியாத தமிழர் மராட்டியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு அன்பரை, அந்த கட்டுரையை வாக்கியம் வாக்கியமாக உரக்கப் படிக்கச் சொல்லி வாக்கியத்தின் சாரம் இன்னது என கிரகித்து, அவரிடம் உறுதிப்படுத்திக்கொண்டு தமிழில் எடுத்தெழுதிக் கொள்ளலாம். பல்வேறு பாரத மொழிகளில் முக்கியமான சொற்களும் சொற்றொடர்களும் ஒன்றுபோல இருப்பதால் இது ஓரளவு சாத்தியம். பழகப் பழக திறன் கூடும்.
– பெரியசாமி