மேற்கு வங்க சந்தேஷ்காலி பெண்களுக்கு நீதி: ஹிந்து முன்னணி காடேஸ்வரா வலியுறுத்தல்

‘தேசம் முழுதும் ஓரணியில் திரண்டு, சந்தேஷ்காலி பெண்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது அவசியம்’ என, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வங்கதேச எல்லையை ஒட்டிய தீவு கிராமமான மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில், பட்டியல் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பின், ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினரின் புகலிடமாக அம்மாநிலம் மாறியுள்ளது.

சந்தேஷ்காலியைச் சேர்ந்த ஷேக் ஷாஜஹான் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து, முதல்வர் மம்தாவின் திரிணமுல் காங்கிரசுக்கு தாவி, சந்தேஷ்காலி பகுதியில் தலைவராக உருவெடுத்துள்ளார்.ஷேக் ஷாஜஹான் அரசியல் தாதாவாக உருவெடுத்து, பட்டியல் சமூகத்தினர்களின் நிலங்களை பறித்து, இறால் பண்ணைகளை அமைத்து, நில உரிமையாளர்களான பட்டியல் சமூகம் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகத்தினரை கொத்தடிமைகளாக மாற்றி, ஊதியம் கூட வழங்காமல் கொடுமை செய்துள்ளார்.

அவரது கும்பல் அரங்கேற்றிய பெண்கள் மீதான பாலியல் வன்முறை, சினிமாவையே மிஞ்சுகிறது. இந்த கொடூரம், சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த 13 ஊராட்சிகள் வரை நீண்டுள்ளது. ஆதாரம் திரட்டி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை, புகார் கொடுப்பவர்களிடமே ஆதாரம் கேட்டு மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளது. ஷேக் ஷாஜகானை கைது செய்ய முனைப்பு காட்டாமல், அம்மாநில முதல்வர் மவுனம் காத்து வருகிறார்.

தேசிய பட்டியல் சமுதாய ஆணையம் நேரடி விசாரணை நடத்தி, அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு, சட்டத்தின் ஆட்சி முடக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்து, மாநில அரசை உடனடியாக கலைக்குமாறு அறிக்கை கொடுத்துள்ளது. தேசம் முழுதும் ஓரணியில் திரண்டு, அக்கிராம பெண்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.