தேர்தல் முடிவுகளின் பின்னணி
400 தொகுதிகளில் வெற்றி என்ற மாபெரும் இலக்குடன் தேர்தல் களமிறங்கிய பாஜகவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியின் தேர்தல் வியூகங்கள் கடும் சவாலை ஏற்படுத்தியதுடன், பாஜகவின் வெற்றிக் கணக்கையும் சுருக்கின. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கும் மத்திய அரசின் நலத்திட்டப் பயனாளிகளும் தான் தோல்வியிலிருந்து பாஜக அரசைக் காப்பாற்றியிருக்கின்றன. எதிர்த்தரப்பிலோ, நிறைவேற்ற இயலாத ‘கடாகட்’ வாக்குறுதிகள், ஜாதிக் கணக்கீடுகளுடன் கூடிய கூட்டணிகள், சிறுபான்மையினரை வசீகரிக்கும் விதமான சலுகை அறிவிப்புகளை இண்டி கூட்டணி முன்வைத்தது. பத்தாண்டு கால ஆட்சி மீதான அதிருப்தி பரவலாக இருந்ததும், சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த எதிர்ப்பு வாக்குகளும் இண்டி கூட்டணிக்கு சாதகமாக இருந்தது.
இத்தனையையும் தாண்டி பாஜக தனிப்பெரும் கட்சியாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை வலுவுடனும் வென்றிருப்பது சாதனை தான். கொரோனா தொற்றுக்குப் பிந்தைய உலக அரசியலில் எந்த நாட்டிலும் ஆளும் கட்சிகளால் வெல்ல முடியவில்லை – பாரதத்தைத் தவிர. இதனை எதிர்க்கட்சிகளால் ஏற்க முடியவில்லை. நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஏற்படுத்திய இடையூறுகளில் இது வெளிப்பட்டது.
உயர் பதவியில் தகுதியற்ற ஒருவர்
கடந்த இரு லோக்சபாக்களில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்குரிய எண்ணிக்கையில் காங்கிரஸ் வெல்லாததால் அந்தப் பதவி காலியாக இருந்தது. இம்முறை கூட்டணியின் தயவில் 99 எம்.பி.க்களைப் பெற்றுவிட்டதால் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்
கிறார். அரசியல் களத்தில் நுழைந்தது முதல் கடந்த 20 ஆண்டுகளில் அவர் வகிக்கும் முதல் அரசியல் சாஸனப் பதவி இது. ஆனால் அதன் மதிப்பை உணர்ந்தவராக அவர் நடந்துகொள்ளவில்லை.
நடப்பு நாடாளுமன்றத்தின் தொடக்கமான கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றியபோதும் இண்டி கூட்டணி அமைதி காக்கவில்லை. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது (ஜூன் 28, 29), லோக்
சபாவிலும் ராஜ்யசபாவிலும் கூச்சலிட்டு அவைகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்
கட்சிகள் செய்தன. அதனை தங்கள் வெற்றியாகவும் அவை பறைசாற்றிக் கொண்டன.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் வேறெந்த விஷயத்தையும் எழுப்பக் கூடாது என்ற மரபு தகர்க்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியின் உரை என்பது, வரும் ஆண்டுகளுக்கான ஆளும்கட்சியின் பிரகடனம். அதன் மீதான விவாதத்தின் இறுதியில் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பிறகே லோக்சபா செயல்பாட்டிற்கு வருகிறது.
ஆனால், இயற்கைக்கு மாறாக, நீட்தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று இண்டி கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதுடன், அவையின் மையப்பகுதியில் கூடி சபாநாயகருக்கு தொந்தரவு கொடுத்தனர். இதனால் லோக்சபாவை ஒத்திவைக்க நேர்ந்தது.
இரண்டாம் நாள் விவாதத்திலும் அமளி தொடர்ந்தது. இதில் காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பேச்சு அநாகரிகத்தின் உச்சத்தை எட்டியது. அவை விதிகளை மீறி, சிவபெருமான் உள்ளிட்ட கடவுளர் படங்களை எடுத்துவந்து காட்டியதுடன், ஹிந்து சமுதாயத்தை தரக்குறைவாகவும் விமர்சித்தார்.
“தங்களை ஹிந்துகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எந்நேரமும் வன்முறை, வெறுப்பைப் பரப்புகின்றனர். அவர்கள் ஹிந்துக்களே அல்லர்” என்று கூறிய ராகுல், பிரதமர் மோடி அதை வன்மையாகக் கண்டித்தவுடன், தான் குறிப்பிட்டது பாஜகவினரைத் தான் என்று பல்டி அடித்தார். மேலும், பாஜக ஒட்டுமொத்த ஹிந்துக்களின் பிரதிநிதி அல்ல என்று கூறி விவாதத்தை மடைமாற்றினார்.
அவரது பேச்சு நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. பாஜக ஆட்சியில் நாடு முழுவதிலும் சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுவதாக லோக்சபாவில் பொய்களை அவர் பதிவு செய்தார். அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மறுநாள் அவை கூடியபோது, லோக்சபா அவைக்குறிப்புகளிலிருந்து ராகுலின் தவறான பேச்சுகள் நீக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
பிரதமரின் தடாலடிப் பேச்சு:
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, இண்டி கூட்டணியின் அநாகரிக நடத்தைக்கும் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கும் தகுந்த பதிலடி கொடுத்தார். அவரது இரண்டரை மணிநேரப் பேச்சு முழுவதிலும் பட்டாசாக இருந்தது.
பிரதமரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, எதிர்க்கட்சியினர் இடைவிடாமல் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலே நேரடியாகத் தூண்டிவிட்டதையும் காண முடிந்தது.
எதிர்க்கட்சியினரின் நோக்கம் மிகவும் தெளிவானது. தற்போதைய பாஜக கூட்டணி அரசு பெரும்பான்மை பெற்ற அரசல்ல என்ற பிம்பத்தை உருவாக்க அவர்கள் தொடர்ந்து முயன்றனர். முந்தைய இரு அரசுகளைப் போல வலுவானதல்ல தற்போதைய மத்திய அரசு என்ற எண்ணம் அவர்களிடம் வேரூன்றி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தற்போதைய லோக்சபாவில் கூடிவிட்ட திடீர் வலிமை அகங்காரத்தை ஏற்படுத்திவிட்டது.
அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ராகுலுக்கோ, தலைக்கு மேல் கத்தியாக நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. எனவே தனது அரசு எதிர்ப்பை பூதாகரமாகக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ராகுல், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாத நிலையில், உளறிக் கொட்டி இருக்கிறார்.
இந்த விவாதத்தில் மத்திய அரசு தற்காப்பு நிலையை எடுக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு. மணிப்பூர் விவகாரம், நீட் முறைகேடு, மதவாதம், அக்னிவீர் திட்டம் ஆகியவற்றை அவர்கள் எழுப்பிடக் காரணம் இதுவே. அவற்றில் பொய்யான தகவல்களே நிரம்பி இருந்தன. ஆனால், லோக்சபாவில் பிரதமர் மோடியின் பதிலுரை இவர்களது பகல் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்த மோடியின் உரை:
பிரதமரின் பேச்சில் கேலி, நகைச்சுவை, ஆணித்தரமான தரவுகள், ஆவேசம், வேதனை, எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை போன்ற பலதரப்பட்ட அம்சங்கள் கலந்திருந்தன. ராகுல் அவதூறு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ளவர் என்பதை மோடி நினைவுபடுத்தியபோது ராகுல் முகத்தில் ஈயாடவில்லை.
கட்டிப் பிடித்தல், கண்ணடித்தல் போன்ற சில்மிஷங்களைச் செய்யும் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகி இருப்பதையும், அவரது சிறுபிள்ளைத்தனத்தால் லோக்சபாவில் அமளி ஏற்பட்டதையும் பிரதமர் முன்வைக்கத் தவறவில்லை.
தவறான தகவல்களால் லோக்சபாவை தவறாக வழிநடத்திய ராகுல் காந்தியின் சிறுபிள்ளத்தனத்தால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர் மீது சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
தேர்தல் பிரசாரத்தில் இண்டி கூட்டணியின் தவறான பிரசாரங்களையும், பொய்யான கடாகட் வாக்குறுதிகளையும் பட்டியலிட்ட மோடி, அவற்றை மீறி பெரும்பான்மை வலிமையுடன் தே.ஜ. கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருப்பதை நினைவுபடுத்தினார்.
ஹிந்துக்களை காங்கிரஸ் வன்முறையாளர்களாகச் சித்தரிக்கிறது. அவர்களது கூட்டணிக் கட்சியோ (திமுக) சநாதன தர்மத்தை டெங்கு நோயுடன் ஒப்பிடுகிறது என்று காட்டமாக விமர்சித்த மோடி, சிறுபான்மையினரிடத்தில் அச்சத்தை உருவாக்குவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்று அம்பலப்படுத்தினார்.
அரசியல் சாஸனத்தின் காவலன்
தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்
கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் விற்கப்பட்டதாக புரளி கிளப்பியது, அக்னிவீர் திட்டத்தை தவறாக விமர்சித்தது, வேளாண் சட்டங்களை தவறாக பிரசாரம் செய்தது, இட ஒதுக்கீடு ரத்தாகிவிடும் என்று பொய்ப் பிரசாரம் செய்தது, அரசியல் சாஸனத்தை மாற்றி விடுவார்கள் என்ற பிரசாரம் போன்ற இண்டி கூட்டணியின் தவறான பிரச்சாரங்களை கோடிட்டுக் காட்டிய பிரதமர் மோடி, அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாஸனத்தைக் காக்கும் காவலனாக பாஜக என்றும் இருக்கும் என்று முழங்கினார்.
மத்திய அரசுக்கு எதிரான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட வாசகத்தை பிரதமர் லோக்சபாவில் நினைவுக்கூர்ந்தார். “இந்த மாபெரும் தேசத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும். இவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்” என்ற உச்சநீதிமன்ற எச்சரிக்கையைக் குறிப்பிட்ட பிரதமர், எதிர்க்கட்சிகளுடன் இணக்கமாகச் செயல்பட அரசு தயாராக இருக்கிறது என்றும் கூறினார்.
மொத்தத்தில், 18வது லோக்சபாவின் ஆரம்பமே அமளியாகத்தான் தொடங்கி இருக்கிறது. கூடுதல் வலிமையுடன் வந்துள்ள எதிர்க்கட்சிகள் அரசை முடக்குவதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்ரன. கூட்டணிக் கட்சிகளான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் பாஜகவின் காலை வாரிவிடும் என்ற அற்ப ஆசையுடன் அவை காத்திருக்கின்றன.
அரசுத் தரப்போ, முந்தைய இரு அரசுகளைவிட கடுமையாக நடந்துகொள்ளப் போவதை முன்னறிவித்துவிட்டது. 2047ம் ஆண்டை நோக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்றாம் கட்டப் பயணம் தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் மாறலாம்; அரசுகள் மாறலாம்; ஆனால் தேசம் என்றும் நிலையானது. இதனை எதிர்க்கட்சிகள் எப்போது உணரும் என்று தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியை இம்முறை பாஜக நேர்த்தியாகவும் நிதானமாகவும் கையாண்டிருக்கிறது. ஆனால் இது போதாது.
அரசையும் நாடாளுமன்றத்தையும் சீர்குலைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் தொடருமானால், அவற்றின் பாணியிலேயே அரசு பதிலடி கொடுக்க வேண்டும். இதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : மூத்த பத்திரிகையாளர்