மூத்தவீரர்கள் தினம்

அல்லும் பகலும் பாடுபட்டு, பல தியாகங்களை புரிந்து நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆயுத படைகளின் மூத்தவீரர்கள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முப்படைகளிலும் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்து தேசத்தின் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களது தேச பணியை பாராட்டுட்டி அங்கீகரிக்கும் வகையில் இந்த தினம் அமைந்துள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌஹான் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோல ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆர் சௌத்ரி மற்றும் கடற்படை தலைமைத் தளபதி ஆர். ஹரி குமார் ஆகியோரும் தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.