மக்களவைத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மாதம் பிரச்சாரம் செய்த மோடி, “காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் வளத்தை அதிக குழந்தைகளை வைத்திருக்கும் ஊடுருவல்காரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடும்” என கூறியிருந்தார். இதையடுத்து, பிரதமர் மோடி முஸ்லிம்களுக்கு எதிராக பேசி வருகிறார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.
அப்போது முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை வைத்திருப்பதாக கூறியது ஏன் என்ற கேள்விக்கு, “ஆச்சரியமாக இருக்கிறது. அதிக குழந்தைகளை உடையவர்கள் என்றால் முஸ்லிம்களைத்தான் குறிக்குமா? நான் பொதுவாகத்தான் சொன்னேன். எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதிக குழந்தைகளை வைத்திருப்பவர்கள் வறுமையில் உள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, உணவு உள்ளிட்ட வசதிகளை தர சிரமப்படுகின்றனர். நான் இந்து என்றோ முஸ்லிம் என்றோ சொல்லவில்லை” என்றார்.
முஸ்லிம்களுக்கு எதிரானவர் மோடி என்ற பிம்பத்தை உங்களால் ஏன் உடைக்க முடியவில்லையா என்ற கேள்விக்கு, “இது ஒரு முஸ்லிமின் கேள்வி அல்ல. 2002-ம் ஆண்டு (கோத்ரா கலவரம்) நிகழ்ந்த சம்பவத்துக்குப் பிறகு என்னுடைய நற்பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கப்பட்டது. என்னுடைய வீட்டைச் சுற்றி முஸ்லிம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஈத் பண்டிகை என் வீட்டிலும் கொண்டாடப்படும். அந்த நாளில் என் வீட்டில் சமைக்க மாட்டார்கள். அனைத்து முஸ்லிம் நண்பர்களும் எங்கள் வீட்டுக்கு உணவு வழங்குவார்கள். இதுபோன்ற சூழலில்தான் நான் வளர்ந்தேன். இப்போதும் எனக்கு பல முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர்” என்றார்.
முஸ்லிம்கள் உங்களுக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்விக்கு, “நாட்டு மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். இந்து–முஸ்லிம் அரசியல் பேசத் தொடங்கினால், அந்த நாள்முதல், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன். நான் இந்து–முஸ்லிம் அரசியல் செய்ய மாட்டேன். இந்த இரு பிரிவினர் இடையே பிரிவினையை ஏற்படுத்த மாட்டேன் இது என்னுடைய உறுதிமொழி” என்றார்.