அரசியல் காரணங்களால் மும்மொழிக் கொள்கை வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார் தமிழக முதல்வர். இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, உங்கள் அறிக்கை கல்வியாளர்களுக்கு அதிர்ச்சி தருகிறது. மும்மொழி கொள்கையை மக்கள் எதிர்க்கிறார்களா அல்லது அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்களா? இதை அமல்படுத்தாவிட்டால் தமிழக மக்களுக்கு வேதனை, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பாரதத்திலேயே தமிழக மாணவர்கள் மட்டுமே தமிழைத் தவிர வேறு ஒரு இந்திய மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் 50 ஆண்டுகளாக தவிக்கின்றனர்.
அதனால் அரிய வாய்ப்புகளை தவற விடுகின்றனர். வசதி படைத்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து கூடுதல் மொழியை கற்கின்றனர். அரசியல் தலைவர்களின் வாரிசுகள் மூன்று மொழிகள் படித்துள்ளனர். அவர்கள் பள்ளிகளில், ஹிந்தி கட்டாய மொழி. ஏன் இந்த இரட்டை நிலை. மாணவர்கள், கூடுதலாக ஒரு மொழியை கற்க அரசே ஏன் வாய்ப்பை மறுக்கிறது. இது ஏழை மாணவர்களை ஏழையாகவே வாழ வைப்பதாகாதா?
மும்மொழி கொள்கையால் தேசப்பற்று மேலோங்கும், தேசிய நல்லிணக்கம் ஏற்படும். மாநிலங்கள் இடையே வேலைவாய்ப்பு, வணிகம் பெருகும்.
அண்ணாதுரை இருந்திருந்தால் சூழலுக்கு ஏற்ப மொழி கொள்கையை மாற்றியிருப்பார். தேசிய நீரோட்டத்தில் இன்றைய இளைஞர்கள் பங்குபெற, பல்வேறு மாநில மக்களுடன் இணைந்து வளர்ச்சி பெற, முன்னேற நமக்கு நேரம் வந்துள்ளது. இது நம் கடமை என கூறியுள்ளார். ஏன் மும்மொழி கொள்கையை எதிர்க்க வேண்டும். ஏன் கூடுதலாக ஒரு மொழியை மாணவர்கள் கற்க வாய்ப்பு வழங்கக் கூடாது என்பதை ஆய்வு செய்து அரசு சிறந்த முடிவெடுக்க வேண்டும்.