சென்னைத் துறைமுகம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதற்கு முந்தைய ஆண்டை விட 5.7 சதவீதம் அதிகமான சரக்குகளைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது. சென்னைத் துறைமுக ஆணையம் சார்பில், தண்டையார்பேட்டை பாபு ஜகஜீவன்ராம் மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. இதில், துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசியதாவது:
பல்வேறு போட்டிகளுக்கு இடையே சென்னைத் துறைமுகம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதற்கு முந்தைய ஆண்டைவிட 5.7 சதவீதம் அதிகமான சரக்குகளைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது. இதன்மூலம் ரூ.154 கோடி உபரி வருவாய் கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இது ரூ.94 கோடியாக இருந்தது. உள்நாடு மற்றும் சர்வதேசஅளவில் கடல்சார் நிறுவனங்களுடன் உரையாடி முதலீட்டை ஈர்க்கும் வகையில், மும்பையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சர்வதேச கடல்சார் இந்தியமாநாட்டில் சென்னை துறைமுகம் சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோல், சென்னை-விளாடிவோஸ்டாக் நகரங்களுக்கு இடையே கிழக்கு கடல்சார் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, இந்திய-ரஷ்யா கூட்டுப் பயிலரங்கம் சென்னைத் துறைமுக ஆணையம் சார்பில், கடந்த 24-ம் தேதி சென்னயில் நடைபெற்றது. சென்னைத் துறைமுகத்தை பசுமைத் துறைமுகமாக மாற்றுவதற்காக, மரங்கள் நடுவதுஉள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு சுனில் பாலிவால் கூறினார். இந்நிகழ்ச்சியில், சென்னைத் துறைமுக ஆணைய துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், தலைமைக் கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளி கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
காமராஜர் துறைமுகத்தில்.. காமராஜர் துறைமுகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், துறைமுக மேலாண்மை இயக்குநர் ஐரீன் சிந்தியா கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகையில், “காமராஜர் துறைமுகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. நடப்பு 2023-24-ம் நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை 33.40 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.58 சதவீதம் அதிகம் ஆகும். காமராஜர் துறைமுகம் நடப்பு நிதியாண்டில் 47 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு சரக்குகளைக் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுகத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார். முன்னதாக, சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு அவர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங் கினார்.