பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமர் மோடியால் 8, ஏப்ரல் 2015ல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் 7-வது ஆண்டு விழாவையொட்டி பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ. 18.60 லட்சம் கோடி அளவிற்கு 34.42 கோடிக்கும் அதிகமாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடனுதவி தேவைப்படும் மற்ற நபர்களும் இத்திட்டத்தில் இணைய முன்வருவதோடு, தேச வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்க வேண்டும். இதுவரை வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையில் 51 சதவீதம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு வழங்கப்பட்டிருப்பது, பிரதமரின் முத்ரா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டியிருப்பதுடன் ‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ என்ற பிரதமரின் தாரக மந்திரத்தை முழுமையாக பிரதிபலிக்கிறது. இந்தத் திட்டம் சிறு தொழில்களுக்கு உகந்த சூழலை உருவாக்க உதவியிருப்பதுடன் அடித்தட்டு அளவில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவியுள்ளது. 68 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடன் கணக்குகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை கடன் உதவி பெறாத உரிய தொழில் முனைவோருக்கு 22 சதவீத கடன்கள் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.