தமிழகத்தைப் பொறுத்த வரையில் நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ் பணி புரிந்து கொண்டிருந்த போது, மீனாட்சிபுரம் ஒட்டுமொத்த மதமாற்றம் நடந்த வேளை. தமிழகத்திற்கு ஓடோடி வந்தார் வாஜ்பாய். கட்சியின் சார்பில் உயர்மட்டக்குழு விசாரணைக்காக வந்திருந்தார். அதனால் அரசாங்க மட்டத்தில் அவருக்குத் தேவையான வசதிகள், உரிய பாதுகாப்பு தரச் சொல்லி பிரதமர் இந்திரா அம்மையார் சொன்ன போதும், அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் வேண்டுகோள் விடுத்த போதும், வேண்டாம் என்று மறுத்து விட்டார் வாஜ்பாய்.
எளிமையாக, ஒரு அம்பாசிடர் காரில் பயணித்து மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்தார். அங்கிருந்து மீனாட்சிபுரம் சென்றோம். அவரை அமர வைப்பதற்கு ஒரு நல்ல நாற்காலி கூட அந்த ஊரில் இல்லை. அவர் வந்த பிறகுதான் நாங்களெல்லாம் நாற்காலியைத் தேடினோம். அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அந்த ஊர் பஞ்சாயத்து கட்டிடத்தின் வாசலில் சின்னதாக ஒரு திண்ணை இருந்தது. அதில் தனது கைக்குட்டையை விரித்துப் போட்டு உட்கார்ந்து விட்டார். அங்கே உட்கார்ந்துதான் அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தார். மேடையில் சற்று பேசினார். சிறிது நேரமாக இருந்தாலும், அந்தக் குறுகிய காலத்தில் சிந்திக்க வைத்தார், சிரிக்க வைத்தார், அழவும் வைத்தார். அது வாஜ்பாய்ஜியின் பாங்கு.
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை திரும்பும் போதும் அதே ஒற்றை அம்பாஸிடர் காரில் தனியாகத்தான் திரும்பினார். அந்த நேரத்தில் நான் உடனில்லை. கூரியூர் நாகராஜன் தான் உடன் இருந்தார். அது பற்றி நாகராஜன் சொன்ன ஒரு விஷயம் இன்னமும் கூட எனக்கு நினைவிருக்கிறது.
வாஜ்பாய் சென்ற அந்த ஒரே வண்டியும் பாதி வழியில் பழுதாகி நின்று விட்டது. அதனால் குறித்த நேரத்தில் அவரால் மதுரை சென்று ரயிலைப் பிடிக்க முடியுமா, சென்னைக்கு வந்து விமானத்தில் டெல்லி போக முடியுமா என்பதெல்லாம் சந்தேகமாகி விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது நமக்கு வசதியும் அதிகமாக இல்லை.
அந்த நேரத்தில் ஒரு பேருந்து வந்தது. கை காட்டச் சொன்னார். வண்டி நின்றது. பேருந்து முழுக்கப் பயணிகள் இருந்தனர். அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஏறிவிட்டார். ஒட்டுனருக்கு ஒரே மகிழ்ச்சி. மதுரையில் அப்போது கட்டபொம்மன் சிலைக்கு இடது பக்கம் பேருந்து நிலையம். வலது புறம் ரயில் நிலையம். பேருந்து நிலையத்தில் இறங்கினால் அங்கிருந்து ரயில் நிலையம் செல்ல என்ன ஏற்பாடு என்று தெரியாது.
ரயிலைப் பிடிக்க வேண்டுமே என்ற கவலை நாகராஜனுக்கு. அதனாலே ஓட்டுனர் இடத்தில் போய் சொன்னார். “அந்த கட்டபொம்மன் சிலை கிட்ட கொஞ்சம் நிப்பாட்டுங்க. நாங்க அப்படியே இறங்கி நடந்தே ரயில் நிலையத்துக்கு போயிடுவோம்!” ஓட்டுனருக்கு வந்ததே கோபம், “முடியாதுங்க!”ன்னு ஒரே வார்த்தையில முகத்தில் அடித்தாற் போல சொல்லிவிட்டார். நாகராஜனுக்கு அதிர்ச்சி. மறுத்ததால் அல்ல, ஒட்டுநர் அதன்பின் சொன்ன வார்த்தைகளால்! “என்னங்க சொல்றீங்க! வந்திருக்கிறது யார் தெரியுமா? அடல் பிஹாரி வாஜ்பாய்! நம்ம நாட்டோட எதிர்காலப் பிரதமர். அவர் என் வண்டியில் பயணம் செய்தார்ங்கறதை என் வாழ்நாள் முழுக்க நான் பெருமையாக பேசிகிட்டு இருக்கக் கூடாதா? யார் தடுத்தாலும் கவலையில்லை, யார் புகார் கொடுத்தாலும் பரவாயில்லை! இந்த வண்டி நேரா ரயில் நிலையம் தான் போகும்; நடுவுல வேற எங்கேயும் நிக்காது! பேருந்து நிலையமெல்லாம் அப்பறம் தான்!” அப்படின்னு சொன்ன ஓட்டுநர் வண்டியை நேரா ரயில் நிலையத்துக்குச் செலுத்தினார். அந்த ஓட்டுநரின் தீர்க்க தரிசனத்தை நினைத்துப் பார்க்கும் போதே மெய் சிலிர்க்கிறது.
கட்டுரையாளர் :
நாகாலாந்து ஆளுநர்