மீண்டும் மலரும் மோடி 3.0 ஆட்சி தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு 2வது இடம் கருத்து கணிப்பு

புதுடில்லி வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 366 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான, ‘இண்டியா’ கூட்டணிக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பா.ஜ., 20.4 சதவீத ஓட்டுகளை பெற்று, ஓட்டு சதவீதத்தில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் – மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதில், எந்த கூட்டணிக்கு எவ்வளவு சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்பது குறித்து, ‘டைம்ஸ் நவ் – மாட்ரிஸ்’ நிறுவனங்கள் இணைந்து கருத்துக் கணிப்புகளை நடத்தின.

இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. வரவிருக்கும் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 366 இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  காங்., தலைமையிலான இண்டியா கூட்டணி 104 இடங்களிலும், பிற கட்சிகள் 73 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

ஓட்டு சதவீதங்களை பொறுத்தவரை தே.ஜ., கூட்டணிக்கு 41.8 சதவீத ஓட்டுகளும், இண்டியா கூட்டணிக்கு 28.6 சதவீத ஓட்டுகளும், பிற கட்சிகள் 29.6 சதவீத ஓட்டுகளும் பெறும் என, கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தே.ஜ., கூட்டணியின் பிரமாண்ட வெற்றிக்கு உத்தர பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. இங்குள்ள 80 லோக்சபா தொகுதிகளில், 77 இடங்களை பா.ஜ., கைப்பற்றும் என கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், 26 தொகுதிகளில் திரிணமுல் காங்.,குக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பீஹாரின் 40 இடங்களில், 35 இடங்களை தே.ஜ., கூட்டணி கைப்பற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

”தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், இரண்டு இலக்க சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெறும்,” என, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக, டைம்ஸ் நவ் – மாட்ரிஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள் அமைந்துஉள்ளன. வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு 59.7 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில், பா.ஜ., 20.4 சதவீத ஓட்டுகளை அள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., 16.3 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும் என முடிவுகள் தெரிவிக்கின்றன. பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்தாலும், அது தமிழகத்தில் அதிக இடங்களை அக்கட்சிக்கு பெற்று தராது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இண்டியா கூட்டணி 36 இடங்களிலும், அ.தி.மு.க., இரண்டு இடங்களிலும், பா.ஜ., ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், ‘என் மண்; என் மக்கள்’ நடை பயணம், மக்களின் கவனத்தை பெருவாரியாக ஈர்த்துள்ளதே பா.ஜ.,வின் ஓட்டு வங்கி அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த முடிவுகளால் தமிழக பா.ஜ.,வினர் குஷியாகி உள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில், 2023 டிச., 15 முதல், 2024 ஜன., 28 வரையிலான காலகட்டத்தில், 35,801 பேரிடம், ‘இந்தியா டுடே’ இதழ் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதன் முடிவில், 39 லோக்சபா தொகுதிகளையும் இண்டியா கூட்டணி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.