மியூனிச்சில் நேதாஜி கண்காட்சி

பாரதத்தின் அமிர்த மஹோத்சவ கொண்டாட்டங்களின் சிறப்பு வாரத்தின் ஒரு பகுதியாகவும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் நினைவு தினத்தையொட்டியும் கடந்த புதன்கிழமை ஜெர்மனியின் மியூனிச் நகரில் உள்ள சான்செரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி திறப்பு விழாவுக்கு வந்திருந்த நேதாஜியின் மகள் டாக்டர் அனிதா போஸை பாரத புலம்பெயர்ந்தோர், பாரத நண்பர்கள் சங்கத்தினர், பாரதத் தூதர் மோகித் யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.

மோகித் யாதவ் பேசுகையில், “சுதந்திர தாய்நாடு நேதாஜியின் கனவு 75 ஆண்டுகளுக்கு முன்பே நனவாகியது. இப்போது, ​​நாங்கள் 1.3 பில்லியன் பாரதத்தினர் புதிய பாரதத்தை உருவாக்க விரும்பும் அமிர்த காலத்தில் நுழைந்துள்ளோம். பிரதமர் மோடி தனது செங்கோட்டை உரையில் அறிவித்தபடி, அடுத்த 25 வருட காலத்தில், 2047க்குள் வளர்ந்த நாடாக பாரதம் மாறும்” என தெரிவித்தார்.

அனிதா போஸ், “புலம்பெயர்ந்த பாரத மக்களுக்கும், பாரதத்துக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் நன்றிகள். பாரதம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆகஸ்ட் 17 நேதாஜி பற்றிய கண்காட்சியைத் திறந்து வைப்பதற்கு ஏற்ற தேதி. பாரதத்தின் 75வது சுதந்திர தினம் நேதாஜியின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்.  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, பாரதம் வெகுதூரம் முன்னேற திட்டமிட்டு வருவதை கண்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடையலாம். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ந்த நாடு என்ற நிலையை அடையலாம். ஒரு வெற்றிகரமான மற்றும் வளமான நாடு வேண்டும் என்ற நேதாஜியின் தொலைநோக்கு இதனால் நிறைவேறும்” என்று கூறினார்.

ஆகஸ்ட் 15 முதல் 21 வரையிலான அமிர்த மஹோத்சவ கொண்டாட்டங்களின் சிறப்பு வாரத்தை பாரத தூதரகம் உலகெங்கும் கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு ஜெர்மனியின் மியூனிச்சின் இங்கிலீஷ் கார்டனில் சுதந்திர தின கிரிக்கெட் நிகழ்ச்சி, கதர் ஏக் பிரேம் கதா, ராக்கெட்ரி போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் திரையிடல் பாரத கலாச்சார நடனங்கள், கொண்டாட்டங்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த புகைப்படக் கண்காட்சி போன்றவை நடத்தப்படுகின்றன. தெற்கு ஜெர்மனியில் நடந்த அமிர்த மஹோத்சவ கொண்டாட்டங்களில் சுமார் 80,000 பேர் கலந்து கொண்டனர்.