நாட்டில் கடந்த 1975-ல் மிசா எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின் கீழ் அவசர நிலையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பிரகடனம் செய்தார். 1977-ல் இதனை அவர் திரும்பப் பெற்றார். இந்நிலையில் அவசர நிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ்சத்தீஸ்கரில் சிறையில் இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் கடந்த 2008-ல் பாஜக ஆட்சியில் தொடங்கப்பட்டது. மிசா கைதிகளுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.
எனினும் கடந்த 2019-ல் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சத்தீஸ்கரில் கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் மிசா கைதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்று மாநில சட்டப்பேரவையில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் நேற்று முன்தினம் அறிவித்தார்.
முதல்வர் விஷ்ணு சாய் மேலும் கூறும்போது, “ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் பிரதமர் மோடி அளித்த பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விவசாயிகளுக்கு வித்தியாசத் தொகை வழங்கப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வாணி திட்டத்தின் கீழ்முதல்கட்டமாக 1,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு வைஃபை வசதி வழங்கப்படும். அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக ஜிபிஎஸ் கருவியும் அவசர கால பொத்தான்களும் நிறுவப்படும்” என்றார்.