`மிசா காலத்தில் சிறை சென்ற தியாகிகளுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தினார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், நெருக்கடிநிலை கால போராட்ட வீரர்கள் சங்கத்தின் 3-வது மாநில மாநாடு நடந்தது. சங்கத்தின் மாநிலத் தலைவர் கந்தகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஓம்சக்தி பாபு முன்னிலை வகித்தார்.
மாநாட்டில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசும்போது, “மிசா காலத்தில் சத்தியாகிரகம் செய்தால்கூட கைது செய்வார்கள். சிறை சென்றவர்கள் அனுபவித்த இன்னல்கள் ஏராளம். பல மாதங்கள் குடும்பத்தையும் மறந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மிசா காலத்தில் பல இன்னல்களை அனுபவித்த தியாகிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். மிசா காலத்தில் சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்” என்றார்.
மாநாட்டில், சங்கத்தின் அகில இந்திய தலைவர் கோவர்த்தன் பிரசாத் அடல், துணைத் தலைவர் ஆனந்தராஜன், கேரள மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில பொருளாளர் தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.