மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவு காட்டும் அரசியல் புள்ளிகள்!

தமிழகத்தில் கைதான மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மீதான வழக்குகளை நீர்த்து போக செய்யும் முயற்சிக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் உதவியாக இருப்பது, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து, ‘கியூ’ பிரிவு போலீசார் கூறியதாவது: தமிழகத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. இதில், மாவோயிஸ்ட் ரீனா ஜாய்ஸ் மேரி முக்கியமானவர். இவர், 2002ல் தர்மபுரி மாவட்டம், ஊத்தங்கரையில் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டபோது, ‘கியூ’ பிரிவு போலீசாரிடம் சிக்கினார்; ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானார். கடந்த, 2008ல், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வடகவுஞ்சி வனப் பகுதியில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி, ரீனாவை பிடிக்க முயன்றனர். ஆனால், ரீனா தப்பி விட்டார்; நவீன் பிரசாத் என்ற மாவோயிஸ்ட் பலியானார். பின், 2016 ஜூலை 22ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் ரீனா சிக்கினார். அவரிடம் விசாரணை நடந்தது. மாவோயிஸ்ட் இயக்க மத்திய கமிட்டி உறுப்பினர் குப்பு தேவராஜ், மாவோயிஸ்ட் இயக்க தலைவர் அஜிதா என்ற காவேரி அக்கா ஆகியோருக்கு, ரீனா சில காலம் அடைக்கலம் கொடுத்தது தெரிய வந்தது. குப்பு தேவராஜ், அஜிதா ஆகியோர், 2015 நவ., 24ல், கேரளாவில் உள்ள நிலாம்பூர் வன பகுதியில், கேரள போலீசாருடன் நடந்த மோதலில் இறந்தனர். இது, தனக்கான பெரிய வலி என விசாரணையின்போது ரீனா, அடிக்கடி கூறியுள்ளார். ரீனா கொடுத்த தகவலில், கரூரில் தங்கி இருந்த பெண் மாவோயிஸ்ட்கள் கலா, சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரீனாவின் கணவர் மின்னல் என்ற கண்ணனும், மாவோயிஸ்ட் தீவிரவாதி தான். இவரும் தமிழக போலீசாரிடம் சிக்கி, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரீனா மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த மாவோயிஸ்ட் இயக்கத்தினர் மீது போடப்பட்ட பல வழக்குகள், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை தீவிரமாக விசாரிக்க விடாமல், மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பார்த்து கொள்கின்றனர். அரசு தொடர்பு மற்றும் செல்வாக்கு உள்ள பலர் இதற்கு உதவி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் — 2ல் நீண்ட காலமாக நடக்கும் வழக்கையும், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கையும் தள்ளுபடி செய்ய வைக்கும் முயற்சியில், மாவோயிஸ்ட்கள் உள்ளனர். தங்கள் மீதான வழக்குகளை நீர்த்து போக வைக்க, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் இயக்க தலைவர்கள் பலரையும் மாவோயிஸ்ட்கள் அணுகிஉள்ளனர். சமீபத்தில், ஆளும் கூட்டணி கட்சி தலைவர் ஒருவரை, மாவோயிஸ்ட்கள் ரகசியமாக சந்தித்து பேசினர். ஆளும் கூட்டணியில் உள்ள சிறு இயக்கத்தின் தலைவர் ஒருவரையும் சந்தித்துள்ளனர். அவர்கள் வாயிலாக, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கில், ‘பொடா’ சட்ட பிரிவுகளை நீக்குமாறு, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி கேட்டுள்ளனர். அந்த கட்சி தலைவர், மாவோயிஸ்ட் கோரிக்கையை பரிசீலிக்குபடி, ஆட்சி மேலிடத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். சட்டத் துறையின் முக்கிய பிரமுகரை நேரடியாக சந்தித்து, அந்த இரண்டு தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அரசு தரப்பில் வழக்கை நடத்துபவர்களிடம், நீக்கு போக்காக நடந்து கொள்ளுமாறு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் தைரியம் அடைந்த மாவோயிஸ்ட் இயக்க கைதிகள், நீதிமன்றத்திற்கு வரும்போது, ‘எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது’ என கூறி வருகின்றனர். கடந்த 4ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாவோயிஸ்ட் கைதிகள் அழைத்து வரப்பட்டனர். அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகளிடம், ‘உங்களை நீதிமன்றத்தில் கவனித்துக் கொள்கிறோம்’ என, மாவோயிஸ்ட் கைதிகள் சவால் விட்டு சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.